கொலையான பிரவீன் நெட்டார் குடும்பத்திற்கு முதல்-மந்திரி அலுவலகத்தில் பணி
கொலையான பிரவீன் நெட்டார் குடும்பத்திற்கு முதல்-மந்திரி அலுவலகத்தில் பணி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் கர்நாடக பா.ஜனதா அரசின் சாதனை விளக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு முதல் முறையாக ஏற்பாடுகள் நடந்த போது தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகரான பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
இதன் காரணமாக மாநாடு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று தொட்டபள்ளாப்புராவில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக மரணம் அடைந்த மந்திரி உமேஷ் கட்டி, பிரவீன் நெட்டார் உருவப்படத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பா.ஜனதா தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் மாநாட்டில் பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, "தட்சிண கன்னடா மாவட்டத்தில் நமது கட்சியை சேர்ந்த பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டு இருந்தார். அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை பா.ஜனதா கட்சியும், இந்த அரசும் செய்து வருகிறது. பிரவீன் நெட்டார் குடும்பத்தை சேர்ந்தவருக்கு முதல்-மந்திரி அலுவலகத்திலேயே பணி வழங்கப்படும். இதனை இந்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்" என்றார்.