3 குழந்தைகளை விஷம் குடிக்க வைத்துவிட்டு தொழிலாளி தற்கொலை
3 குழந்தைகளை விஷம் குடிக்க வைத்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு டவுன் பி.எச். காலனியை சேர்ந்தவர் சமியுல்லா. இவரது மனைவி சாகேரா பானு. இந்த தம்பதிக்கு மோமின்(வயது 12), சைமா (10) என்ற மகள்களும், 7 வயதில் சுகேல் என்ற மகனும் உள்ளனர். சமியுல்லா பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்கு சென்ற சாகேரா பானு, துமகூருவுக்கு திரும்பி வர மறுத்து விட்டார். மேலும் அவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகைப்படங்களை தனது கணவருக்கும் அவர் அனுப்பி வைத்திருந்தார்.
துபாயில் இருந்து திரும்பி வரும்படி சாகேரா பானுவை, சமியுல்லாவும், அவரது பிள்ளைகளும் பலமுறை அழைத்தும், அவர் வரவில்லை. இதன் காரணமாக தனது 3 குழந்தைகளுக்கு விஷத்தை குடித்துவிட்டு சமியுல்லாவும் விஷம் குடித்தார். இதில், சமியுல்லா சிகிச்சை பலனின்றிஇறந்து விட்டார். குழந்தைகள் மோமின், சைமா, சுகேலுக்கு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து துமகூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.