15-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு யஷ்வந்த் சின்கா வாழ்த்து


15-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு யஷ்வந்த் சின்கா வாழ்த்து
x

கோப்புப்படம்

இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள திரவுபதி முர்முவுக்கு யஷ்வந்த் சின்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யக் கடந்த ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது

இந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து இரு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர்.

திரவுபதி முர்முவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்தனர்.

கடந்த ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணிக்கு முதல் மாலை 5 மணிக்கு டெல்லி நாடாளுமன்றம் மற்றும் மாநிலத் தலைமைச் செயலகங்களில் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதையடுத்து வாக்குப் பெட்டிகள் கடந்த 18ஆம் தேதி மாலை விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன.

அதிக வாக்குகளை எதிர்பார்த்ததை காட்டிலும் திரவுபதி முர்முவுக்கு அதிகமான வாக்குகளே கிடைத்துள்ளது. மொத்த வாக்குகளின் 2,824 வாக்குகள் பெற்று திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு மொத்தம் 6,76,803 வாக்குகள் மதிப்பு கிடைத்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்கா 1,877 வாக்குகள் பெற்றுள்ளார். அவரின் மொத்த வாக்குகள் மதிப்பு 3,80,177.

இதன்மூலம் திரவு முர்மு நாட்டின் 15ஆவது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ளார். இதையடுத்து திரவுபதி முர்முவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்காவும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "2022 ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதற்கு எனது சக குடிமக்களுடன் இணைந்து நானும் அவரை வாழ்த்துகிறேன். நாட்டின் 15வது ஜனாதிபதியாக அவர் எவ்வித அச்சமும், விருப்பமும் இல்லாமல் அரசியலமைப்பின் பாதுகாவலராகச் செயல்படுவார் என இந்தியா நம்புகிறது" என்று அதில் யஷ்வந்த் சின்கா பதிவிட்டுள்ளார்.





Next Story