கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை


கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
x

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று மாநிலம் முழுவதும் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். திருவனந்தபுரம் சாக்காவில் தண்ணீர் தேங்கி நின்றதால், கார், ஆட்டோக்கள் போன்றவை சாலையை கடக்க முடியாமல் திணறின. இதே நிலைதான் கொச்சி எம்.ஜி.ஆர். சாலை, பத்தனம்திட்டா உள்பட பல பகுதிகளிலும் காணப்பட்டது.

புயல் சுழற்சியின் காரணமாக மாநிலம் முழுவதும் வருகிற 18-ந் தேதி வரை கன முதல் மிதமான மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வீடுகளும் இடிந்துள்ளன. ஆனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மழையின் காரணமாக பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கடற்கரைக்கு செல்லவும் படகு சவாரி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story