மாணவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டி 2 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி பறித்த வாலிபர் கைது


மாணவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டி  2 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி பறித்த வாலிபர் கைது
x

பெங்களூருவில் கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி 2 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளியை வாங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் கல்லூரி மாணவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி 2 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளியை வாங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 கிலோ 900 கிராம் தங்க நகைகள்

பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவி எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது, சுமித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

சமீபத்தில் மாணவியுடனான காதலை அவர் துண்டித்து விட்டார். பின்னர் மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக சுமித் மிரட்டல் விடுத்தார். மேலும் பணம் கேட்டும் மிரட்டினார். அதன்படி ஒரு கிலோ 900 கிராம் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்களை சுமித்திடம் அந்த மாணவி கொடுத்திருந்தார்.

வாலிபர் கைது

இதற்கிடையில், வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் காணாமல்போய் இருப்பதை கண்டு மாணவியின் தந்தை, மகளிடம் விசாரித்த போது, தான் காதலித்த வாலிபர் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியதால், நகைகளை எடுத்து கொடுத்ததாக மாணவி, தந்தையிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை, உடனடியாக பேடராயனபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தலைமறைவாக இருந்த சுமித்தை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆபாச படங்களை வெளியிடுவதாக...

அதாவது மாணவியை முதலில் சுமித் காதலித்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் மாணவியின் செல்போனில் இருந்து, அவரது புகைப்படம், வீடியோக்களை தனது செல்போனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதன்பிறகு, மாணவியை காதலிப்பது போல் நடித்து, நகை, பணத்தை பறிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் தண்ணீரில் போதைப்பொருளை கலந்தும் மாணவிக்கு சுமித் கொடுத்துள்ளார்.

அதனையும் அவர் வீடியோ எடுத்து வைத்திருந்தார். அந்த வீடியோவையும் வெளியிடுவதாக மிரட்டியதால் மாணவி தனது வீட்டில் இருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை எடுத்து வந்து கொடுத்தது தெரியவந்துள்ளது. கைதான சுமித்திடம் இருந்து 300 கிராம் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story