2 பேரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
தாவணகெரேயில் 2 பேரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிக்கமகளூரு;
தாவணகெரே மாவட்டம் சந்தேபென்னூர் அருகே உள்ள சிறுதோனி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுனில் (வயது 33), தேவேந்திரா (35), ராகவேந்திரா (28). இந்த நிலையில் சுனில், தேவேந்திரா ஆகியோருக்கும், ராகவேந்திராவுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
மேலும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சுனிலும், தேவேந்திராவும் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த விழாைவ பார்க்க சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ராகவேந்திரா, பள்ளி மாணவிகளை கிண்டல் செய்ததாக தெரிகிறது.
அப்போது சுனிலும், தேவேந்திராவும் அவரை தட்டி கேட்டுள்ளனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராகவேந்திரா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்கள் 2 பேரையும் குத்தி உள்ளார். இதில் சுனிலும், தேவேந்திராவும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சந்தேபென்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகவேந்திராவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.