'குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை இளைஞர்கள் தோற்கடிக்க வேண்டும்' - பிரதமர் மோடி


குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை இளைஞர்கள் தோற்கடிக்க வேண்டும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 25 Jan 2024 7:25 AM GMT (Updated: 25 Jan 2024 8:00 AM GMT)

குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகள் மற்ற இளைஞர்களை முன்னேற அனுமதிப்பதில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இதையடுத்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சார பணிகள் என தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் ஏற்பாடு செயப்பட்டிருந்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கான பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்த நாட்டை எங்கள் அரசாங்கம் இருளில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. இளம் வாக்காளர்களின் வாக்குகள் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். சுதந்திரத்திற்கு முந்தைய 25 ஆண்டுகளில் இளம் தலைமுறையினருக்கு இருந்த பொறுப்புகளைப் போலவே, அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை மேம்படுத்தும் பொறுப்பு தற்போதைய இளம் வாக்காளர்களுக்கு உள்ளது.

இளைஞர்கள் ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிரானவர்கள். குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகள் மற்ற இளைஞர்களை முன்னேற அனுமதிப்பதில்லை. இக்கட்சிகளின் தலைவர்களின் மனநிலை இளைஞர்களுக்கு எதிரானது. குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை உங்கள் வாக்கு பலத்தால் நீங்கள் தோற்கடிக்க வேண்டும்.

10-12 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் நிலவிய சூழல் இளைஞர்களின் எதிர்காலத்தை இருண்டதாக்கி விட்டது. ஆனால் இப்போது விஷயங்கள் மாறிவிட்டன. வாய்ப்புகள் மற்றும் வெற்றிக் கதைகள் குறித்து இப்போது பேசப்படுகிறது. இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உங்களின் கனவுகள்தான் எனது தீர்மானம் என்பது மோடியின் உத்தரவாதம். இளைஞர்கள் எப்போதும் என் முன்னுரிமை. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் நிலையான மற்றும் வலுவான பெரும்பான்மை அரசு இருப்பதால், பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த 370-வது பிரிவு, ஜி.எஸ்.டி., பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்தது."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story