சுற்றுலா பயணிகளுக்கு செல்போன் செயலி-மந்திரி செலுவராயசாமி தகவல்


சுற்றுலா பயணிகளுக்கு செல்போன் செயலி-மந்திரி செலுவராயசாமி தகவல்
x

சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்காக விரைவில் செல்போன் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மந்திரி செலுவராயசாமி கூறினார்.

மண்டியா:-

மந்திரி செலுவராயசாமி

மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா கம்பதள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட பஞ்சாயத்து, மாவட்ட நிர்வாகம், மாவட்ட சுற்றுலா துறை ஆகியவை இணைந்து நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு மந்திரி செலுவராயசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

மண்டியா மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. மண்டியா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்து கொள்ள புதிதாக செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதில் அனைத்து சுற்றுலா தலங்கள் பற்றியும் தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன. அந்த செல்போன் செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள்

மண்டியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. அவற்றை நாம் வெளி உலகிற்கு கொண்டுவர வேண்டும். முதலில் அந்த சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் சென்றடைய சாலைகள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து அவர் நாகமங்களா தாலுகா பெல்லூரு அரசு பள்ளியில் நடந்த கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அதில் 68 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3.53 கோடி கடன் உதவியை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், 'மகளிர் சுயமாக தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும். மகளிரால் பெல்லூரு கிராஸ் பகுதியில் ஆயத்த ஆடை தொழிற்சாலை தொடங்கப்பட்டு இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. இதுபோல் மண்டியா, கைமரம் பகுதி, கொப்பதல்லூ ஆகிய பகுதிகளிலும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று கூறினார்.


Next Story