போக்குவரத்து நெரிசலால் திணறும் காமசமுத்திரம் ரெயில்வே கேட்


போக்குவரத்து நெரிசலால் திணறும் காமசமுத்திரம் ரெயில்வே கேட்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

போக்குவரத்து நெரிசலால் காமசமுத்திரம் ரெயில்வே கேட் பகுதி தினமும் திணறி வருகிறது. இதனால் அங்கு மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பங்காருபேட்டை:

காமசமுத்திரம் ரெயில்வே கேட்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் பங்காருபேட்டை அருகே அமைந்துள்ளது காமசமுத்திரம் பகுதி. இந்த பகுதி கோலார் தங்கவயல் மற்றும் பங்காருபேட்டை இடையே மையப்பகுதியாக அமைந்துள்ளது. காமசமுத்திரம் வழியாகத்தான் சென்னை-பெங்களூரு பசுமை வழிச்சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது.

காமசமுத்திரம் வழியாக ரெயில்பாதை அமைந்துள்ளது. தினமும் காமசமுத்திரம் வழியாக 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன.

10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் சென்று வருகிறது. இப்படி பரபரப்பாக காணப்படும் அந்த பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வாகனங்கள் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல பெரும் சிரமத்தை சந்திக்கின்றன. தினமும் இது தொடர்கதையாக உள்ளது.

போக்குவரத்து நெரிசல்

அங்கு ரெயில்வே கேட் மூடப்பட்டால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆந்திர மாநிலம் கூடிப்பள்ளி, குப்பாஞ்சே, வியாப்பனப்பள்ளி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளுக்கு செல்ல இந்த சாலை பிரதான சாலையாக விளங்குவதால் இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வியாபாரிகள், அவசரமாக ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் என ஏராளமானோர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அங்கு ஒரு மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கும், ரெயில்வே துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story