நவராத்திரியையொட்டி அரசு பஸ்களில் அலைமோதிய பெண்கள் கூட்டம்


நவராத்திரியையொட்டி அரசு பஸ்களில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:46 PM GMT)

சிக்கமகளூரு மாவட்டத்தில் நவராத்திரியையொட்டி அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டத்தில் நவராத்திரியையொட்டி அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.சிக்கமகளூரு மாவட்டத்தில் நவராத்திரியையொட்டி அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

தசரா விழா

மைசூரு தசரா விழா நேற்று ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் நிறைவடைந்தது. 10 நாட்கள் நடைபெற்ற தசரா விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இதேப்போல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா, குடகு, சிவமொக்கா ஆகிய இடங்களில் தசரா விழா கொண்டாப்பட்டது. இதனை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இந்தநிலையில், நவராத்திரி பண்டிகையையொட்டி கர்நாடகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.

இதேப்போல், சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கடந்த 9 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. குறிப்பாக சிருங்கேரி சாரதம்மன் கோவில், ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவில்களில் நவராத்திரி பண்டிகையையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. இதனை காண சிக்கமகளூரு மாவட்டம் மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் இ்ருந்து ஏராளமானோர் வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

பெண்களுக்கு இலவசம்

குறிப்பாக பெண்கள் கூட்டம் கோவில்களில் அதிகம் காணப்பட்டது. காரணம் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால் ஏராளமான பெண்கள் கோவில்களில் குவிந்தனர். மேலும் தொடர் விடுமுறையால் குடும்பத்துடன் ஒரநாடு அன்னபூர்ணேஸ்வரி, சிருங்கேரி சாரதம்மன், கலசா கலசேஸ்வரர் ஆகிய கோவில்களில் பெண்கள் வந்தனர். கோவிலுக்கு வரும் அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் அரசு பஸ்களில் இருக்கை பிடிப்பதற்கு பெண்கள் முண்டியடித்து கொண்டு ஏறினர்.

மேலும் பஸ்சின் ஜன்னல் வழியாக இருக்கை பிடிக்க ஏறி சென்றனர். ஒரு சில இடங்களில் பெண்கள் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அதேபோல், சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தொடர் விடுமுறையால் பாபாபுடன்கிரி, முள்ளயன்கிரி, மாணிக்கதாரா அருவி, கெம்மன்குந்தி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் சுற்றுலா தலங்களில் எங்கு பார்த்தாலும் வாகனங்களே இருந்தன.

போக்குவரத்து பாதிப்பு

முள்ளையன்கிரி பகுதியில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் அந்தப்பகுதியில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story