ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புகளை செய்யாததால் எனது கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது- சரத்பவார் குற்றச்சாட்டு

ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புகளை செய்யாததால் எனது கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக சரத்பவார் குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பை,
ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புகளை செய்யாததால் எனது கட்சி தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக சரத்பவார் குற்றம்சாட்டி உள்ளார்.
எதிர்பார்ப்புகளை செய்யவில்லை
தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். இந்தநிலையில் நேற்று மாலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:-
தற்போதைய ஆட்சியாளர்கள் எங்கள் கட்சியை சேர்ந்த 9-10 தலைவர்களிடம் சிலவற்றை எதிர்ப்பார்த்தார்கள் என்பது உண்மையாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. அந்த எதிர்பார்ப்புகளை செய்ய நாங்கள் தயாராக இல்லை. அந்த நிலைப்பாட்டுக்கு எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் இருந்து ஒதுபோதும் விலக மாட்டோம்.
சிலரால் ஜீரணிக்க முடியவில்லை
எங்களின் கட்சியின் நிலைப்பாட்டை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே நாங்கள் கஷ்டத்தை (அமலாக்கத்துறை விசாரணை) அனுபவிக்கிறோம். அதற்காக நாங்கள் கவலைப்படவில்லை. எங்களின் 10 முக்கிய தலைவர்கள் விசாரணையை எதிர்கொண்டனர். சிலர் மீது விசாரணை முகமைகள் நடவடிக்கையும் எடுத்தது.
அனில்தேஷ்முக் ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டினார்கள். அதற்காக 13-14 மாதங்கள் ஜெயிலிலும் இருந்தார். பின்னர் மோசடி ரூ.100 கோடி அல்ல, ரூ.1½ கோடி என கூறப்பட்டது. இது குற்றச்சாட்டுகள் எவ்வளவு மிகைப்படுத்தி கூறப்படுகிறது என்பதை காட்டுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முதலில் கேட்கும் போது மக்கள் அதிர்ச்சி அடைவார்கள். அனில்தேஷ்முக் அவமானப்படுத்தப்பட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.
இவ்வாறு அவர் கூறினார்.






