அக்சா கடற்கரை அருகே லாட்ஜில் பெண் மர்மசாவு- உடன் தங்கியவருக்கு வலைவீச்சு

அக்சா லாட்ஜில் தங்கி இருந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவருடன் தங்கி இருந்த நபரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
அக்சா லாட்ஜில் தங்கி இருந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவருடன் தங்கி இருந்த நபரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்குவாதம்
மும்பை மலாடு அக்சா கடற்கரை அருகே லாட்ஜ் ஒன்றில் 47 வயது பெண்ணுடன் ஆண் ஒருவர் கடந்த 11-ந்தேதி மாலை வந்து தங்கினார். லாட்ஜில் தங்கி இருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று காலை பெண்ணுடன் தங்கி இருந்தவர் லாட்ஜில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.
தனியாக இருந்த பெண் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார். லாட்ஜில் தங்குவதற்கான நேரம் முடிவடைந்ததால் ஊழியர்கள் கதவை தட்டி உள்ளனர். உள்ளே இருந்து பதில் எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பெண்ணின் உடல் மீட்பு
இதன்படி போலீசார் அங்கு சென்று மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அப்பெண் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டனர். உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்கு பின்னரே அப்பெண் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் எனவும், உயிரிழந்த பெண் யார்? எனவும், உடன் தங்கி இருந்த நபரை பிடிக்கவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






