இரவில் கீரை சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா?


இரவில் கீரை சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா?
x
தினத்தந்தி 19 May 2019 5:30 AM GMT (Updated: 18 May 2019 11:59 AM GMT)

உணவுப் பழக்கம் தவறாக இருந்தால் ஒவ்வாமை ஏற்படும். ஒத்துவராத சில உணவு வகைகள் அல்லது பழைய உணவுகளால் உடலில் விஷத்தன்மை சேரும். சமைத்த உணவை அப்போதே சாப்பிட்டு முடித்துவிட வேண்டும்.

பணிச்சுமை, நேரமின்மை போன்ற காரணங்களால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவை எடுத்து சூடு செய்து சாப்பிடுவது தவறான உணவுப் பழக்கம். பழைய உணவு அமிர்தத்திற்கு ஒப்பானதாக இருந்தாலும் அதை சாப்பிடக்கூடாது என சொல்கிறது சித்த மருத்துவம். பழைய உணவுகளை உண்டால் அதில் இருக்கும் நுண்கிருமிகளின் தாக்கத்தால் வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.

சாப்பிடும்போது ஐஸ் தண்ணீர் குடிப்பது ஜீரணத்தை மந்தப்படுத்தும். அதை தவிர்த்து வெதுவெதுப்பான நீர்அருந்தலாம். துரித உணவு களான பீட்சா, பர்கர் போன்றவை சாப்பிடும்போது நடுவே குளிரூட்டப்பட்ட இனிப்பு சோடா வகை பானங்களை அருந்தக்கூடாது. அருந்தினால் அந்த உணவுகளில் உள்ள கொழுப்பு மற்றும் அந்த பானத்தில் உள்ள அதிக சர்க்கரை போன்றவை ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி, அதிக அமிலத்தை சுரந்து நெஞ்செரிச்சலை உண்டாக்கும். உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

சிலர் பிரியாணி மற்றும் சிற்றுண்டி சாப்பிட்ட உடன் செரிமானத்திற்காகவும், அதிக தாகம் ஏற்படுவதை தவிர்க்கவும் டீ அல்லது காபி சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். டீ மற்றும் காபியில் உள்ள துவர்ப்பு பொருள்கள் உணவிலுள்ள இரும்புச்சத்தை சிதைத்துவிடும். அதற்கு பதிலாக கொத்தமல்லி விதை, சுக்கு, ஏலக்காய், கலந்த பானத்தை குடிக்கலாம்.

சாப்பிட்டு முடித்தவுடன் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு பொருட்கள், பழகலவைகள் சாப்பிடுவது ஜீரணத்தை பாதிக்கும். உணவின் இறுதியில் இனிப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள ரசாயன உப்பு, கொழுப்பு, அதிகப் படியான செயற்கை இனிப்பு, பல்வேறு ரசாயன நிறமிகள் போன்றவை பலவிதமான ஒவ் வாமையை உண்டாக்கும். சில குழந்தைகளுக்கு காளான்,சோயா போன்ற உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

இரவில் சாப்பிடக்கூடாத உணவுகள்

இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார் சத்துக்களை ஜீரணிக்கக்கூடிய நொதிகள் இரவில் குறைவாகவே சுரக்கும். அதனால் கீரை ஒருவித மந்தநிலையை உருவாக்கி, ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தும். நெல்லிக்காய் மற்றும் பச்சை காய்கறிகளை கொண்டு செய்யப்படும் சாலட் போன்ற உணவுகளையும் இரவில் தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவு வகைகளில் அதிக புரதமும், கொழுப்பு சத்தும் உள்ளதால் அவைகளும் ஜீரணமாக அதிக நேரமாகும். அதனால் அவைகளையும் இரவில் உண்பதை தவிர்க்கவேண்டும். தயிர் எளிதில் ஜீரணமாகாத மந்ததன்மை கொண்டது. அதை இரவில் சாப்பிட்டால் கபம் அதிகரித்து, காய்ச்சல் ஏற்படக்கூடும்.

பாலுடன் சேராத உணவுகள்

- சமைக்காத முட்டையை பாலில் கலந்து அருந்தினால் அது வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும்.

- மீன் மற்றும் கோழி இறைச்சியை பாலுடன் கலந்து சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் ரத்தம் மாசுபடும்.

- பாலுடன் பழம் கலந்து தயாரிக்கும் பானங்கள் மற்றும் பழ கூழ்களை அறவே தவிர்க்க வேண்டும். தோல் ஒவ்வாமை மற்றும் நீடித்த சளியை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை உண்டாகும்.

- பாலுடன் முள்ளங்கி, முருங்கைக்காய் போன்ற காய்கறிகள் மற்றும் கீரைகளை சேர்த்து சமைத்து சாப்பிடக்கூடாது.

- பாலுடன் தயிரையும் கலக்கக்கூடாது.

- குழைந்த சாதம், கஞ்சியோடு கலந்த சாதம், வேகாத சாதம் போன்றவற்றை சாப்பிடுவது ஏற்புடையதல்ல. சமைத்த சாதத்தை நீண்ட நேரம் கழித்தும் சாப்பிடக்கூடாது.

- உணவு ஒவ்வாமையால் குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் போன்ற தொல்லைகள் ஏற்படும். சிலருக்கு தோலில் அரிப்பு, தடிப்பு தும்மல்,தலைவலி, தொண்டை கரகரப்பு, சளி போன்றவை ஏற்படும். 

ஒவ்வாமைக்கு மருந்து

ஒரு கைப்பிடி அருகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்துக்கொள்ளவும். இரண்டு வெற்றிலையை எடுத்து காம்புகளை நீக்கிவிட்டு 200 மி.லி. தண்ணீரில் ஐந்து நிமிடம் கொதிக்கவைத்து இறக்கிவிடவும். அதை ஒரு வாரம் பருகிவந்தால் ஒவ்வாமை நீங்க வாய்ப்பு உண்டு. 

உணவு சமைக்கும்போது செய்யும் தவறுகள்

நாம் சமைக்கும் உணவு மட்டுமல்ல, அவற்றை சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களும் சரியானவையாக இருக்கவேண்டும். நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிக சூட்டில்வைத்து சமைக்கக்கூடாது. அலுமினிய பாத்திரத்தில் அமிலத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களை சமைப்பதால் மூளையில் உள்ள நியூரான்கள் அழியும் ஆபத்து உண்டு.

நெய் மற்றும் புளிப்பு சுவையுடைய பொருட்களை வெண் கலப் பாத்திரங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும். நீர் அருந்துவதற்கு செம்புப் பாத்திரங்களை பயன்படுத்துகிறவர்கள் தினமும் அதனை சுத்தம்செய்யவேண்டும். சுத்தம் செய்யாவிட்டால் அதில் பச்சை நிறபடலம் படிந்து, வாந்தியை உண்டாகும்.

தேன் இயற்கையான இனிப்புத்தன்மை கொண்டது. அதை சூடுபடுத்தி சாப்பிட கூடாது. சமையல் எண்ணெய்யை அதிகமான சூட்டில் புகை வரும் வரை வைத்து வறுத்தோ பொரித்தோ சாப்பிடக்கூடாது. அது டிரான்ஸ் கொழுப்பை அதிகமாக்கி இதயத்திற்கு இடைஞ்சல் செய்யும்.

ஒருமுறை பொரிக்க பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தக்கூடாது எண்ணெய்யின் மூலக்கூறுகள் அதை ஒருமுறை பயன்படுத்திய பிறகு மாற்றமடைந்துவிடும். அதே எண்ணெய்யை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தும்போது விஷத்தன்மை உண்டாகி அது புற்றுநோய்க்கு காரணமாகிவிடக்கூடும். உணவுகளை புகையில் இட்டு கருகவைத்து சாப்பிடக் கூடாது. கருகவைத்து உண்ணும் மாமிச உணவு களாலும் புற்றுநோய் வரக்கூடும். சர்க்கரையை சூடுபடுத்தி கருகவைத்து தயாரிக்கப்படும் பேக்கரி உணவுகளும் உடலுக்கு ஏற்றதல்ல.

இஞ்சியை தோல் நீக்கியே சமைக்க வேண்டும். கீரைகளை சமைக்கும்போது சிறிது மிளகு சேர்க்கவேண்டும். அது கீரையிலுள்ள நஞ்சுவை நீக்கும்.

"நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய் உருக்கி உண்பவர் தம் பேருரைக்கிற்போமே பிணி" என்ற பாடல் தேரையர் நோய் அணுகா விதி நூலில் உள்ளது. இது, நீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். மோரில் நீர் கலந்து நன்கு கடைந்து பருக வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது.

கட்டுரை: டாக்டர் இரா.பத்மபிரியா, சித்த மருத்துவர், சென்னை.

-தொடரும்.

Next Story