வாய் முதல் வயிறு வரை சுத்தப்படுத்தும் வழிமுறைகள்..


வாய் முதல் வயிறு வரை சுத்தப்படுத்தும் வழிமுறைகள்..
x
தினத்தந்தி 26 May 2019 5:31 AM GMT (Updated: 26 May 2019 5:38 AM GMT)

நாம் உண்ணுகின்ற உணவு செரிமானம் ஆகும்போதும், ஊட்டச்சத்துக்களை செல்கள் பயன்படுத்தும்போதும், வளர்சிதை மாற்றத்தின் காரணமாக உடலில் கழிவுகள் தோன்றும். வியர்வை, சிறுநீர், மலம் ஆகிய மூன்று கழிவுகள் உடலில் உருவாகிறது.

நாம் உண்ணுகின்ற உணவு செரிமானம் ஆகும்போதும், ஊட்டச்சத்துக்களை செல்கள் பயன்படுத்தும்போதும், வளர்சிதை மாற்றத்தின் காரணமாக உடலில் கழிவுகள் தோன்றும். வியர்வை, சிறுநீர், மலம் ஆகிய மூன்று கழிவுகள் உடலில் உருவாகிறது.

நாம் உண்ணும் உணவுகள் மூன்று பகுதிகளாக மாறி செயல்படும். முதல் பகுதி உடலை வளர்க்கும். இரண்டாவது பகுதி உயிர் மற்றும் மனம் போன்ற மிக நுட்பமான பகுதிகளுக்கு உணவாகும். மூன்றாம் பகுதியானது உடலில் கழிவுகளாக மாறும். இப்படி உருவாகுவதுதான் மலம், சிறுநீர், வியர்வை போன்றவை.

உடலில் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாத பித்த கபங்கள் இந்த கழிவுகள் வழியாக வெளியேறுகின்றன. மலம் மூலமாக அதிகமான வாதமும், பித்தமும்- சிறுநீர் வழியாக கபமும், பித்தமும்- வியர்வை வழியாக பித்தமும் வெளியேறும். பொதுவாக மனித உடல் நச்சுப் பொருட்களையும், கழிவுப் பொருட்களையும் சிறுநீரகம், குடல், நுரையீரல் மற்றும் சருமம் மூலமாக வெளியேற்றும்.

சிலவித நச்சுப் பொருட்களை நாம் சுவாசத்தின் மூலம் உள்ளிழுத்து விடுகிறோம். தூசு, தரை விரிப்பு, பெயிண்ட், சிகரெட் புகை, வீட்டில் உள்ள மாசு மற்றும் பொது இடங்களில் பரவிக் கிடக்கும் தூசு ஆகியவைகளை நாம் நம்மையறியாமல் சுவாசத்தின் மூலம் உள்ளிழுக்கின்றோம். நாம் உண்ணும் உணவு மற்றும் தண்ணீரில் நம்மை அறியாமலேயே நச்சுப் பொருட்கள் கலந்துவிடுகின்றன. நாம் அன்றாடம் பல் தேய்ப்பது, குளிப்பதன் மூலம் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதுபோல, நம் உடலின் உள்ளே சேரும் நச்சுக்களையும் நீக்கவேண்டும். நீக்கினால்தான் நோயின்றி வாழ முடியும்.

நம் உடலில் நச்சுகள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. அவை குறைந்த அளவில் இருக்கும்போது பெரியஅளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அளவு அதிகமாகும்போது, அவை செல் வரை சென்று சிதைவை ஏற்படுத்தும். அப்போது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தன்னுடைய இயக்கத்தை குறைத்துக்கொள்ளும். அது தொடரும்போது, அந்த உறுப்புகள் பாதிக்கப்படும். அதன் மூலம் முதுமை விரைவுபடுத்தப்படும். இளமையிலேயே முதுமையான தோற்றம் உருவாகும். சுறுசுறுப்பு குறைந்து, சோர்வு அதிகரிக்கும். கழிவுகளால் சரும நோய்கள், மூட்டு வலி, காய்ச்சல் போன்ற பல பிரச்சினைகள் உண்டாகும்.

உடல் கழிவுகளை வெளியேற்ற பல வழிமுறைகளை கண்டுள்ளனர் நம் சித்தர்கள்.

ஆறுதிங்கட்கு ஒருதடவை வமனமருந்து அயில்வோம்;
அடர்நான்கு மதிக்குஒருகால் பேதிஉரை நுகர்வோம்;
தேறுமதி ஒன்றரைக்குஓர் தரம்நசியம் பெறுவோம்!
எனத் தேரையர் பிணியணுகா விதி என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்திக்கு மருந்து எடுத்துக்கொள்வது; நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து சாப்பிடுவது, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மூக்கில் மருந்தைவிட்டுச் சுத்தப்படுத்துவது போன்றவற்றைக் கடைப் பிடித்து நச்சுக்களை வெளியேற்றவேண்டும். இதனால், உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படும். உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் கூடும். வாத பித்த கபம் சீராக இயங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாய் முதல் வயிறு வரை உள்ள பகுதிகளை சுத்தமாக்கும் இந்த வழிமுறையை 6 மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.

பொதுவாக நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்களை உட்கொள்ளும்போதும், அஜீரணத்தாலும் இயல்பாகவே வாந்தி உண்டாகும். சிலருக்கு தலைவலி அதிகமாக இருக்கும்போதும், நுரையீரலில் சளி அதிகம் சேர்ந்தாலும் வாந்தி உண்டாகும். மேல் வயிறு, மார்பு பகுதிகள் மூச்சுக் குழாய்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை இயல்பு நிலைக்கு கொண்டுவர வாந்தி சிகிச்சை தேவைப்படுகிறது.

நாள்பட்ட தோல் நோய்கள், அஜீரணம், இரைப்பு நோய், சளியுடன் கூடிய இருமல், தைராய்டு சுரப்பி மந்தமாக சுரக்கும்நிலை கொண்டவர்களுக்கும் வாந்தி சிகிச்சை பலன் அளிக்கும். வயிறு, சிறுகுடலின் மேல்பகுதி, கல்லீரல், கணையம், மண்ணீரல் இவற்றின் இயக்கங்கள் இதன் மூலம் சீராகும். பசி அதிகப்படும். ஜீரணம் நன்கு நடக்கும். உணவின் நுண்ணூட்டச் சத்துக்கள் முழுமையாக உடலுக்குள் செல்லும். உடலில் அதிகரித்த கபம் வெளியேறி உற்சாக நிலை தோன்றும்.

வாந்திக்கான வழி முறை: 200 மில்லி நீரில் இரண்டு தேக்கரண்டி உப்பை கலந்து ஒரே நேரத்தில் குடித்து விட வேண்டும். சிறிது நேரத்தில் வாந்தி உண்டாகும். அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனையுடன் இதை மேற்கொள்வது சிறந்தது.

வயிற்றை சுத்தப்படுத்துதல்:

நான்கு மாதத்திற்கு ஒரு முறை வயிற்றை சுத்தப்படுத்த மருந்து எடுத்து கொள்வதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்கலாம் என கூறுகிறது சித்த மருத்துவம். குடலினில் தங்கியுள்ள கழிவு பொருட்கள், நோய் உருவாக முதன்மை காரணமாக உள்ளது. இந்த நச்சு பொருட்களை வெளியேற்ற பேதி மருத்துவம் அவசியம் ஆகின்றது. அதனால் கால் வலி, மூட்டு வலி, அஜீரணம் போன்ற வாத நோய்கள் நீங்கும், உற்சாகம் கிடைக்கும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

வயிற்றை சுத்தமாக்கும் மருந்து: இதற்கு ஆமணக்கு எண்ணெய் மிகவும் சிறந்தது. இது உடலில் உள்ள கழிவுகளை மலத்தின் மூலம் வெளியேற்றி, பசியை தூண்டி உடலுக்கு நன்மை அளிக்கின்றது. பொதுவாக 15 - 30 மி.லி. வரை எடுக்கலாம். இதற்கு அதிகாலை நேரம் மட்டுமே சிறந்தது. வெறும் வயிற்றில்தான் செய்ய வேண்டும். முன்தினம் இரவும், மருந்து எடுத்த அன்றும் மோர்சாதம், பால்சாதம், அரிசி கஞ்சி போன்ற எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக காரம், மசாலா, புளி ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்.

-தொடரும்.

கட்டுரை: டாக்டர் இரா.பத்மபிரியா, சித்தமருத்துவர், சென்னை.

Next Story