சிறப்புமிகுந்த தூதுவளையும்.. வல்லாரையும்..

ஆரோக்கியம், இளமை, அழகு ஆகிய மூன்றையும் உணவு தரும், என்ற உண்மையை பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே சித்தர்கள் கண்டறிந்து, நமக்கு வகுத்தளித்திருக்கிறார்கள்.
சிறப்புமிகுந்த தூதுவளையும்.. வல்லாரையும்..
Published on

ரோக்கியம், இளமை, அழகு ஆகிய மூன்றையும் உணவு தரும், என்ற உண்மையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கண்டறிந்து, நமக்கு வகுத்தளித்திருக்கிறார்கள். பல்வேறு மூலிகைகளும், தாதுப்பொருட்களும் வாழ்நாளை அதிகரிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவை என்பதையும் கண்டு பிடித்து நமக்கு தொகுத்து தந்திருக்கிறார்கள். போகர், தேரையர், கருவூரார் போன்ற சித்தர்கள் பல்வேறு நூல்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெல்லிக்காய், எலுமிச்சை, மஞ்சள், பூசணிக்காய், மிளகு, சீரகம், தாமரைப்பூ, ஆவாரம்பூ, பிரண்டை, சிறுகீரை, மணத்தக்காளி போன்றவைகளை காயகல்ப மூலிகைகளாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

காயகல்ப மூலிகைகள் திசுக்களில் ஏற்படும் அழிவை தடுக்கக்கூடியதாக இன்றைய ஆராய்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அவை மேம்படுத்துவதன் மூலம் உடல் செல்கள் முதுமையை தள்ளிப்போடுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

தவறான உணவுப் பழக்கம் மற்றும் அதிகமான அளவு துரித உணவு உண்பது, சுற்றுப்புற சூழல் சீர்கேடு போன்றவைகளால் உடல் தசைகள் தளர் வடையும். இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றத்தை உருவாக்கும். மூட்டுகளில் எளிதில் பாதிப்பை உருவாக்கும். மஜ்ஜை மற்றும் இனப்பெருக்கத்திற்கு உதவும் தாதுக்களிலும் பாதிப்பை தோற்றுவிக்கும். இதனால்தான் குழந்தையின்மை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது.

களைப்பு, சோம்பல், அசதி, தூக்கமின்மை, சுறுசுறுப்பின்மை போன்றவை பலரையும் பாதிக்கிறது. இதனால் உடல் மட்டுமின்றி, மனதும் பாதிக்கப்படுகிறது. உடலையும், மனதையும் உற்சாகமாக களைப்பின்றி வைத்துக்கொள்வதற்கு தூண்டுதல் அளிக்கும் சக்தி காயகல்ப மூலிகைகளில் நிறைந்துள்ளது. 108 காயகல்ப மூலிகைகள் பற்றி சித்தமருத்துவத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், அவைகளில் சிலவற்றின் சிறப்புகளை இங்கே தருகிறேன்!

கல்லீரலின் பாதுகாவலன் கரிசலாங்கண்ணி

இந்த கீரை கல்லீரல் செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்கிறது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படும் மூலக்கூறுகளையும் இந்த கீரை தன்னகத்தே கொண்டுள்ளது. ரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கவிடாமல் காக்கின்றது. கரிசலாங்கண்ணியில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. ரத்த சோகைக்கு சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு அரை தேக்கரண்டி கரிசலாங்கண்ணி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுக்கவேண்டும். இந்த கீரையை சமைத்து உணவாக உண்ணலாம். அல்லது பொடிசெய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தேனில் கலந்து காலை, மாலை உணவிற்கு முன் சாப்பிட்டு வரலாம். கரிசாலை கல்ப சூரணம் மற்றும் மாத்திரையை மருத்துவ ஆலோசனைபடி சாப்பிடலாம்.

நுரையீரலின் நண்பன் தூதுவளை

"தூதுவளையுணத் தொக்கினிற் றெக்கிய

வேதையா நோயெலா மெய்யைவிட் டகலுமே" - என்கிறது, சித்தமருத்துவ பாடல்.

கபத்தால் ஏற்படும் காது, மூக்கு, தொண்டை நோய்கள், சளி, இருமல், மூச்சிறைப்பு போன்றவற்றை தூதுவளை நீக்குவதுடன், வீரிய சக்தியையும் அதிகரிக்கும். தூதுவளையில் செய்யப்படும் சட்னி, துவையல், ரசம், அடை என அனைத்துமே கபநோய்களைப் போக்கும். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள், நுரை யீரல் செல் சிதைவுறுதலைத் தடுத்துநிறுத்தி, உடலை ஒவ்வாமையில் இருந்தும் பாதுகாக்கும். தூதுவளை லேகியம், நெய், சூரணம் போன்றவைகளும் உள்ளன.

செல்களை புதுப்பிக்கும் மூக்கிரட்டை

இது, உடலுறுப்புகளின் செயல்பாடுகளைப் புதுப்பிக்கும் மூலிகை. அதனால் இதற்கு புனர்நவா என்ற பெயரும் உண்டு. ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா, கிரியாடினின் அளவை மூக்கிரட்டை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் வேரை குடிநீராகப் பயன்படுத்தினால், சிறுநீர் பெருகும். வீக்கங்கள் குறையும். உடல்கழிவுகள் சிறப்பாக வெளியேறும். மூட்டு வலி குறையும். மூக்கடைப்போடு மூச்சுவிட சிரமப்படுகிறவர்களுக்கும் இது நல்ல மருந்து.

"மூக்கிரட்டையினிலை முறையுன வாதநோயாக்கையிற் பெட்டியரவென வடங்குமே" என்கிற பாடல், மூக்கிரட்டையை மருந்தாகவோ உணவாகவோ சாப்பிட்டு வந்தால், உடம்பில் உள்ள நோய்கள் பெட்டியில் இட்ட பாம்பு போல அடங்கி விடும் என்று குறிப்பிடுகிறது.

இதயம் காக்கும் மருதம்

இதய நோய் குணமாக மருதம்பட்டை நல்லதொரு மருந்தாகும். ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்புக்கு காரணம். மருதம் பட்டைத்தூள், ரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் உடல் முழுவதும் ரத்தத்தை சீராக செலுத்த உதவும். இதயத்தை ஊக்குவிக்கும் ஆற்றலும், ரத்தஅழுத்தத்தை இயல்பு நிலையில் வைத்திருக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. இரண்டு கிராம் மருதம்பட்டை பொடியை வெந்நீர் அல்லது பாலில் கலந்து காலை, இரவு உணவுக்குப் பின் பருகினால் ரத்தக் குழாய் அடைப்பு வராது. அடைப்பு இருப்பின் நீங்கும். கொழுப்பு சேராமல் உடல் எடையை குறைக்கவும் உதவும். சர்க்கரை நோய்க்கும் இது சிறந்த மருந்து.

நினைவாற்றலுக்கு வல்லாரை

வல்லாரை உடலில் உஷ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். மூளையின் நரம்பு களைத் தூண்டி நினைவாற்றலைப் பெருக்கும். இந்த காயகல்ப மூலிகையில் சுண்ணாம்புச் சத்து, இரும்பு சத்து, நார்ச்சத்து போன்றவை உள்ளது. இதனை நிழலில் உலர்த்தி, பொடிசெய்து வைத்துக்கொள்ளவேண்டும். 1 தேக்கரண்டி பொடியில் தேவையான அளவு தேன் கலந்து தினமும் காலை, மாலை இருவேளை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு தினமும் 10 வல்லாரை இலையை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்படும். வல்லாரையில் உள்ள வேதிப்பொருட்கள், மூளைக்குச் சோர்வு தராமல், அறிவைத் துலங்க வைக்கும். அல்சைமர் என்ற மறதி நோய்க்கு மிக சிறந்த மருந்து இது.

காயகல்ப மருந்துகளை ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட வேண்டும். மருந்துகளை உண்ணும் காலகட்டத்தில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியவற்றை உணவில் குறைத்துக்கொள்ளவேண்டும்.

-தொடரும்.

கட்டுரை: டாக்டர் இரா.பத்மபிரியா, சித்தமருத்துவர், சென்னை.

X

Daily Thanthi
www.dailythanthi.com