

இந்திய விடுதலைக்காக கொங்கு நாட்டில் இருந்து புயலென சீறிப்பாய்ந்தவர் தீரன் சின்னமலை. அவரை அறிந்த அளவுக்கு அவரோடு தோளோடு தோளாக நின்று ஆங்கிலேயர்களை சிதறடித்த குணாளன் நாடாரை பலரும் அறிந் திருக்க வாய்ப்பில்லை. வெள்ளையருக்கு எதிராக வீரமாக போர்புரிந்து தூக்கு கயிற்றை முத்தமிட்டவர்களின் வரிசையில் இவரும் இருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள காரையூர் என்றழைக்கப்பட்ட நத்தக்காடையூரில் முத்தப்பன், காளியம்மாள் தம்பதி களுக்கு கி.பி.1757-ம் ஆண்டு பிறந்தவர் குணாளன். தீரன் சின்னமலையும், குணாளன் நாடாரும் ஒரே வயதினர். நாட்டுப்பற்று மிக்க இருவரும் தாய் திருநாடே முக்கியம் என திருமணம் கூட செய்யவில்லை. இவர்களை போல கருப்பசேர்வை என்பவரும் திருமணம் செய்யவில்லை. இவர்கள் மூவருமே வெள்ளையருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.
இதற்காக தடிவரிசை, சிலம்பாட்டம், மல்யுத்தம், வாள்வீச்சு, வளரி போன்ற அனைத்து தற்காப்புக்கலைகளையும் கற்றுத் தேர்ந்தனர். இவர்களுக்கு ஆசானாக இருந்து இவற்றை கற்றுக்கொடுத்தவர் வீரமுத்து என்பவர்.
இவர்கள் மூவரின் வீரசாகசங்கள் அந்த காலகட்டத்தில் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தம். இவர்களின் போராட்டம் கொங்கு இளைஞர்கள் இடையே சுதந்திர வேட்கையை ஏற் படுத்தியது. அப்படி நாட்டுக்காக போராட வந்த இளைஞர்களுக்கு தீரன் சின்னமலை, குணாளன் நாடார், கருப்ப சேர்வை ஆகியோர் போர் பயிற்சி கொடுத்தார்கள்.
குணாளன் நாடார் எப்போதும் சேனை தலைவனுக்குரிய கரிய தடியினை கையில் வைத்திருப்பார். அதை தங்கம், வெள்ளியால் அலங் கரித்து இருப்பார். நல்ல உயரமாக, கட்டுமஸ்தான உடலோடு குதிரையில் வலம் வரும் அவரை கட்டுத்தடிக் காரன் என்று அழைப்பார்கள். ஆனால் அவரோ வெள்ளை மனம், இரக்க குணம் கொண்டவராகத் திகழ்ந்தார். இவர் குறித்த நாட்டுப்புற பாடல்கள் இன்றளவும் கொங்கு மண்டலத்தில் பாடப்படுகிறது.
1782-ம் ஆண்டு திப்பு சுல்தானோடு கைகோர்த்த இவர்கள், 3 மைசூர் போர்களில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றிகண்டனர். இவர்களது ஆக்ரோஷத்தை கண்ட ஆங்கிலேயர்கள் கதிகலங்கினர். எனவே இவர்களை சூழ்ச்சியால் வீழ்த்த வெள்ளையர்கள் முடிவு செய்தனர். இதற்காக அவர்களது சமையல்காரன் நல்லப்பனை பயன்படுத்திக் கொண்டனர். நல்லப்பனின் துரோகத்தினால் தீரன் சின்னமலை, குணாளன் நாடார், கருப்ப சேர்வை மற்றும் தீரன் சின்னமலையின் சகோதரர்களை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஆங்கிலேயர்களால் சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில் 1805-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி தூக்கிலிடப்பட்டனர். அந்த வகையில் தாய் திருநாட்டின் விடுதலைக்காக தூக்கு கயிற்றை முத்தமிட்டவர்தான் வீரகுணாளன் நாடார்.