பாரதியார் பாடலை பொதுவுடமை ஆக்கிய ஏவி.எம்.


பாரதியார் பாடலை பொதுவுடமை ஆக்கிய ஏவி.எம்.
x
தினத்தந்தி 15 Aug 2021 9:19 AM GMT (Updated: 15 Aug 2021 9:19 AM GMT)

சினிமா தயாரிப்பிலும், படப்பிடிப்புக்கான ஸ்டூடியோ வைத்திருந்ததிலும் ஏவி.எம். நிறுவனம் மிகவும் முக்கியமானது.

சினிமா தயாரிப்பிலும், படப்பிடிப்புக்கான ஸ்டூடியோ வைத்திருந்ததிலும் ஏவி.எம். நிறுவனம் மிகவும் முக்கியமானது. அவர்களின் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்றாக, பாரதியின் பாடல்களை பொதுவுடமையாக்கிய சம்பவம் இருக்கிறது. அதுபற்றி பார்ப்போம்.

அந்த காலத்தில் சென்னை ராட்டன் பஜாரில், கிராமபோன் ரெக்கார்டு கம்பெனி ஒன்று இருந்தது. அவர்கள் ஒலிப்பதிவு செய்யலாம் என்று, பாரதியாரின் பாடல்களை 600 ரூபாய்க்கு காப்பிரைட் வாங்கி வைத்திருந்தனர். ஆனால் அதை ஒலிப்பதிவு செய்யவில்லை. பின்னாளில் ரெக்கார்டு கம்பெனி மூடப்பட்ட நிலையிலும், காப்பிரைட் மட்டும் அவர்களிடமே இருந்தது.

ஏவி.மெய்யப்ப செட்டியார், அந்த ரெக்கார்டு கம்பெனி முதலாளியை சந்திப்பதற்கான வாய்ப்பை ஒருவர் மூலமாக பெற்றார். எதற்கும் இருக்கட்டும் என்று, ரூ.10 ஆயிரத்தை கையில் எடுத்துச் சென்றார்.

‘பாரதியின் பாடல்களை 600 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். நாம் எப்படியும் 2 ஆயிரம் அல்லது 3 ஆயிரத்தில் பேசி முடித்து வாங்கிவிடலாம்’ என்று நினைத்திருக்கிறார், ஏவி.மெய்யப்ப செட்டியார்.

ஆனால் அந்த நிறுவன முதலாளியோ, எடுத்த எடுப்பிலேயே “பத்தாயிரம் தந்தால், காப்பிரைட் உரிமையைத் தருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு ஏவி.மெய்யப்ப செட்டியார், தன்னுடைய வியாபார யுக்தியை எல்லாம் பிரயோகித்தும், அந்த நபர் கீழே இறங்கி வருவதாக இல்லை. எனவே ‘இன்னொரு நாள் பேசிக்கொள்ளலாம் என்றால், அவரின் மனம் மாறிவிடக்கூடாதே’ என்று கருதிய ஏவி.மெய்யப்ப செட்டியார், உடனடியாக தான் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து காப்பிரைட்டை எழுதி வாங்கிக்கொண்டார்.

அந்த நேரத்தில் தான் தயாரித்த ‘நாம் இருவர்’ படத்தில் பயன்படுத்திக்கொள்வதற்காகத்தான், பாரதியாரின் பாடல்களை ஏவி.எம். நிறுவனம் அவ்வளவு தொகை கொடுத்து வாங்கியது.

பின்னாளில் அரசு சார்பில், பாரதியாரின் பாடல்களை பொதுவுடமையாக்கும் முயற்சி நடந்தது. அதற்காக அரசாங்கத்தில் இருந்து பணம் கொடுக்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால் ஏவி.மெய்யப்ப செட்டியார், “பாரதியார் பாடல்களின் உரிமையை இந்த நொடியே அரசாரங்கத்திற்கு மாற்றித் தருகிறேன். ஆனால் அதற்காக எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம்” என்று கூறிவிட்டார்.

Next Story