ஆங்கிலேயருக்கு எதிரான முதல் புரட்சி அறிக்கை

ஆங்கிலேயர்களை தங்களின் வீரத்தால் குலைநடுங்க வைத்தவர்கள் பலரும், தமிழக மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆங்கிலேயருக்கு எதிரான முதல் புரட்சி அறிக்கை
Published on

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக எத்தனையோ பேர், உயிர் தியாகம் செய்துள்ளனர். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கும், போர் ஆயுதங்களுக்கும் அஞ்சி, சில சிற்றரசர்கள் வரி செலுத்தி வந்திருந்தாலும், ஆங்கிலேயர்களை தங்களின் வீரத்தால் குலைநடுங்க வைத்தவர்கள் பலரும், தமிழக மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்.

சில துரோகிகளின் உதவியுடன் அவர்களுடைய வீரம் வீழ்த்தப்பட்டிருந்தாலும், நெஞ்சுரத்துடன் வெள்ளையர்களை எதிர்த்து நின்ற அவர்களின் துணிச்சல், இன்றைய இளைஞர்கள் நெஞ்சை நிமிர்த்தி வீறு நடை போட உந்துசக்தியாக இருக்கிறது. அவற்றுள் ஒரு வீரம் மிக்க வரலாற்று நிகழ்வுதான் ஜம்புதீவு பிரகடனம்.

ஆங்கிலேயருக்கு எதிராக 1857-ம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகமே, இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் என்று கூறப்படும் நிலையில், அதற்கு வெகுகாலம் முன்பாகவே தென் தமிழகத்தில் கிளர்ச்சி வெடித்ததற்கான சான்றுகள் உள்ளன. 1529-ல் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள், அதை சுற்றி உள்ள பகுதிகளை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர். அவற்றுள் ஒன்றுதான் சிவகங்கை பாளையம். இதனை 1749-ம் ஆண்டு முதல் முத்துவடுக நாதர் ஆட்சி செய்து வந்தார். இவர் ஆங்கிலேயருக்கு வரி செலுத்த மறுத்ததால், அவரை ஆங்கிலேயர்கள் கொன்றனர்.

இதையடுத்து சிவகங்கை, ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்தது. முத்து வடுகநாதரின் மனைவி வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் மற்றும் ஹைதர்அலி உதவியுடன் ஆங்கிலேய படைகளை விரட்டியடித்து, மீண்டும் சிவகங்கையை கைப்பற்றி ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு சிவகங்கை மருதுசகோதரர்களின் பாதுகாப்பில் இருந்தது. இந்த சமயத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி, 1801-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சிவகங்கை மீது போர் தொடுத்தனர். சிவகங்கை சேர்வை சின்னமருதுவை சிறைபிடிப்பது தொடர்பாக, ஆங்கிலேய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது.

சிவகங்கை சேர்வை சின்னமருது, கம்பெனி அரசுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறியுள்ளார். பாஞ்சாலங்குறிச்சி போராட்டக் காரர்களுக்கு ஆட்களையும், ஆயுதங்களையும் கொடுத்து வருகிறார். முறையான வாரிசாக இல்லாமல் சிவகங்கை மீது தனது முறையற்ற அதிகாரத்தை செலுத்தி வருகிறார். இப்போது சிவகங்கை அரியணையை அபகரிக்க முயல்கிறார். இதனால் கம்பெனி அரசு சின்னமருதுவையும், அவரது ஆதரவாளர்களையும் பிடிக்க கர்னல் அக்னியுவை அனுப்பி உள்ளது. முறையான வாரிசை சிவகங்கையின் அரியணையில் அமர்த்தவும் அறிவுறுத்தி உள்ளது.

ஆகவே வாரிசு உரிமை கோருபவர்கள் யாராக இருந்தாலும், கர்னல் அக்னியுவை சந்தியுங்கள். அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படும். கிளர்ச்சியாளர் களுக்கு தகுந்த தண்டனை அளித்தபிறகு, வாரிசுரிமை பற்றி தீர விசாரித்து உரிமை உள்ளவர் களுக்கு பட்டம் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கை சொன்னது.

இந்த அறிவிப்புக்கு பதிலடியாக சின்னமருது மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அனைவரும் சாதி உணர்வற்று ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும். நம்மிடையே ஒற்றுமை இல்லாததால்தான், அன்னியர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆள்கிறார்கள். அவர்கள் ஆளும் பகுதிகளில் எல்லாம் மக்கள் பெரிதும் ஏழ்மையில் உள்ளனர். சோற்றுக்குப் பதிலாக நீராகாரம்தான் உட்கொள்கின்றனர். எனவே அனைவரும் ஒன்று சேருங்கள். எவன் ஒருவன் இந்த அறிவிப்பை, ஒட்டப்பட்ட சுவற்றில் இருந்து எடுக்கிறானோ, அவன் பஞ்சமா பாதகம் செய்பவனாக கருதப்படுவான் என்றிருந்தது.

இந்த அறிக்கையே ஜம்புதீவு பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. ஜம்பு என்றால் நாவல் மரம் என்று பொருள். ஜம்புதீவு என்றால் நாவல் மரங்கள் நிறைந்த தீவு என்று பொருள். இந்தியா ஒரு காலத்தில் ஜம்புத்வீபம் என்றும், தமிழில் நாவலந்தீவு என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு 1801-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி திருச்சி கோட்டை வெளிப்புற சுவரிலும், திருவரங்கம் அரங்கநாதர் கோவில் மதில் சுவரிலும் ஒட்டப்பட்டது.

இந்த அறிக்கையால் கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள், சின்னமருது, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, திருப்பத்தூர் காளையார்கோவில் அருகே தூக்கிலிட்டு கொன்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com