ஐம்பதிலும் ஆரோக்கியம்


ஐம்பதிலும் ஆரோக்கியம்
x
தினத்தந்தி 21 Jun 2021 5:31 PM GMT (Updated: 21 Jun 2021 5:31 PM GMT)

50 வயதை கடந்தவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் உடலை ஆரோக்கியமாகவும், மனதை அமைதியாகவும் வைத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

உணவு பழக்கங் களையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இவை ஆரோக்கியத்தின் புதையலாகவும் விளங்குகின்றன. வயதான அறிகுறி களை தாமதப்படுத்தவும் செய்யும். ராஸ்பெர்ரியில் ஆரோக்கியமான ஆன்டிஆக்சிடென்டுகள் உள்ளன. மேலும் அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடல்நலத்தை மேம்படுத்த உதவும். வயதான காலத்தில் இரைப்பை குடலின் செயல்பாடு மெதுவாகவே நடக்கும். அது சீராக செயல்பட நார்ச்சத்து நிறைந்த உணவுகள்தான் உதவும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கீரை, ஆப்பிள், முழு தானியங்கள், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

வயதாகும்போது வயிற்றில் அமிலத்தன்மை குறையும். அதனை நிவர்த்தி செய்வதற்கு வைட்டமின் பி 12 ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடலாம். மீன், பாதாம், பால், பாலாடைக்கட்டி, முட்டை, இறைச்சி வகைகள் போன்றவற்றில் வைட்டமின் பி12 அதிகம் இருக்கின்றன. மஞ்சள், லவங்கப்படை போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களையும் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீல்வாதம் காரணமாக ஏற்படும் வலியை போக்குவதற்கும் மஞ்சள் உதவும். அறிவாற்றல் திறனை மேம்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு இருப்பதை பல ஆய்வுகளும் உறுதிபடுத்தி இருக்கின்றன. போதுமான அளவு தண்ணீர் பருகுவதற்கும் மறந்துவிடக்கூடாது. உடலின் அத்தியாவசிய உறுப்புகள், செல்கள், திசுக்களின் செயல்பாட்டிற்கு தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. வயதான பெண்கள் தினமும் 9 கப் தண்ணீரும், ஆண்கள் 13 கப் தண்ணீரும் பருகுவது நல்லது.

Next Story