பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்


பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்
x

கூந்தன்குளத்தில் பறவைகள் தங்கியிருக்கும் காலங்களில் கிராம மக்கள் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கூட வெடி வெடிப்பது, மேளதாளம் இசைப்பது உள்ளிட்டவற்றை தவிர்த்து வருகிறார்கள்.

கூந்தன்குளம் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, பறவைகள் சரணாலயம்தான். நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. ஆண்டுதோறும் பல்வேறு வகையான பறவைகள் கூந்தன்குளத்துக்கு வந்து மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்துச் செல்வது வழக்கம்.

உள்நாட்டு பறவைகளான கூழக்கடா, வர்ணநாரை, அரிவாள் மூக்கன், அண்டில் பறவை, பாம்புதாரா, நீர்க்காகம், குருட்டு கொக்கு, கரண்டிவாயன்நாரை, வெளிநாட்டு பறவை இனங்களான ஊசிவாய் வாத்து, பட்டை தலை வாத்து, கோல்டன் பிளவர், நீலச்சிறகி, நத்தை கொத்தி நாரை, கொசு உள்ளான் போன்ற 227 வகையான பறவைகள் கூந்தன்குளத்துக்கு வந்து செல்கின்றன.

இந்தியாவில் உள்ள பறவைகள் மட்டுமல்லாது சைபீரியா, சீனா, ரஷியா, மத்திய ஆசியா, ஆர்டிக் பகுதிகளில் உள்ள பறவைகளும் இங்கு வந்து தங்கி கூடு கட்டுகின்றன. அவை இப்பகுதி வயல்வெளிகளில் காணப்படும் சிறுபூச்சிகள், புழுக்கள், தானியங்கள் போன்றவற்றை சேகரித்து தானும் தின்று, தனது குஞ்சுகளுக்கும் கொடுக்கின்றன.

இனப்பெருக்கம் செய்வதற்காக வருகை தரும் இந்த பறவைகளை, அந்த கிராம மக்கள் தங்கள் வீட்டு விருந்தாளிகளாகத்தான் பார்க்கிறார்கள். பறவைகள் வீடுகளில் உள்ள மரங்களில் கூடுகட்டி இருந்தாலும், அவர்கள் அதனை பிரித்துப்போடுவது இல்லை. மாறாக பறவைகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கிறார்கள்.

கூந்தன்குளத்தில் பறவைகள் தங்கியிருக்கும் காலங்களில் கிராம மக்கள் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் கூட வெடி வெடிப்பது, மேளதாளம் இசைப்பது உள்ளிட்டவற்றை தவிர்த்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகை காலங்களிலும் யாரும் பட்டாசு வெடிப்பது இல்லை. மேலும் வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது கிடையாது. இந்த தீபாவளியையும் அவர்கள் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் சத்தமில்லாத தீபாவளியாக கொண்டாட உள்ளனர்.


Next Story