முதியவர்கள் 6 ஆயிரம் அடிகள் நடந்தால்...


முதியவர்கள் 6 ஆயிரம் அடிகள் நடந்தால்...
x

முதியவர்கள் எவ்வளவு தூரம் நடக்கிறார்களோ அதற்கேற்ப அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

நடைப்பயிற்சி அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாக கருதப்பட்டாலும் முதியவர்களுக்கு அத்தியாவசியமானது. அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு வலிமை சேர்ப்பதில் நடைப்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றும் இதனை உறுதிபடுத்தியுள்ளது. முதியவர்கள் தினமும் 3 முதல் 4 மைல்கள் (தோராயமாக 4.8 கி.மீ முதல் 6.4 கி.மீ) வரை நடக்கலாம். அல்லது 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் அடிகள் வரை நடக்கலாம். அப்படி நடக்கும் முதியவர்களுக்கு 2 ஆயிரம் அடிகள் நடப்பவர்களை காட்டிலும் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 40 முதல் 50 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சியில் ஈடுபடும் 18 வயதுக்கு மேற்பட்ட 20,152 நபர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறார்கள், அவர்களின் ஆரோக்கியம் எத்தகைய நிலையில் இருக்கிறது என்பது கண்காணிக்கப்பட்டது. 6 ஆண்டுகளாக அவர்களிடம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

முதியவர்கள் எவ்வளவு தூரம் நடக்கிறார்களோ அதற்கேற்ப அவர்களின் ஆரோக்கியம் மேம்படும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது. அதேவேளையில் முதியவர்கள் தங்கள் உடல்நலனை கருத்தில் கொண்டு நடக்கும் தூரத்தை தீர்மானிக்க வேண்டும். உடல் ஒத்துழைக்காதபட்சத்தில் அதிக தூரம் நடப்பது அவஸ்தைக்கு ஆளாக்கிவிடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மேற்கொள்ளும் உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்பதும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் வேகமாக நடப்பதால் கூடுதல் நன்மை எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


Next Story