அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய அருங்காட்சியகம்..!


அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய அருங்காட்சியகம்..!
x

உலகின் மிக சக்தி வாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்று, அமெரிக்க உளவுத்துறை (சி.ஐ.ஏ.). ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் இதன் பங்கு முக்கியத்துவமானது.

இவர்கள் அதிரடி தாக்குதலுக்கு மட்டுமல்ல, கலைநயத்திற்கும் பிரபலமானவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆம்..! அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில், சி.ஐ.ஏ.விற்கு சொந்தமான அருங்காட்சியகம் ஒன்று இயங்குகிறது.

1947-ம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறை தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை சி.ஐ.ஏ. நிகழ்த்திய போர்க்கள சாகசங்களை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

இங்கு சதாம் உசேனின் லெதர் ஜாக்கெட், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டபோது அவரிடம் இருந்த துப்பாக்கி ஆகியவை இங்கு வைக்கப்பட்டுள்ளன. காட்சிப்படுத்தப்பட்டுள்ள 600 பொருட்களில் ரகசிய தகவல்களைக் கடத்த பயன்படுத்தப்படும் எலி பொம்மைகள், கேமராவுடன் கூடிய சிகரெட் பாக்கெட், உளவு கேமராவுடன் கூடிய புறா, வெடிக்கும் மது பாட்டில்கள் போன்ற பொருட்களும் உள்ளன.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வீட்டின் துல்லியமான மாதிரி வடிவம், பல்வேறு போர்களின்போது அமெரிக்காவால் நிர்மூலமாக்கப்பட்ட கப்பல்கள், விமானங்கள், தளவாடங்களின் மாதிரிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

சிறப்பு வாய்ந்த இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு நேரடி அனுமதி கிடையாது. ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். உளவுத்துறையின் செயல்பாடுகளை வெட்ட வெளிச்சமாக அறிந்து கொள்வது, பாதுகாப்பு விஷயத்தில் கேள்விக்குறியை ஏற்படுத்தும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.


Next Story