குழந்தைகளுக்கு அவசியமான உடற்பயிற்சிகள்


குழந்தைகளுக்கு அவசியமான உடற்பயிற்சிகள்
x

பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர வைக்க வேண்டும். அதற்காக கடுமையான பயிற்சி முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. சில எளிய உடற்பயிற்சிகளை செய்வதற்கு பழக்கப்படுத்தினாலே போதுமானது.

சிறு வயது முதலே குழந்தைகள் தங்கள் உடல் நலன் மீது அக்கறை செலுத்துவதற்கு உடற்பயிற்சி உதவும். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் மாயைக்குள் மூழ்கி கிடப்பதால் குழந்தைகள் பலரும் ஓடியாடி விளையாடும் வாய்ப்பை தவறவிடுகிறார்கள். பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர வைக்க வேண்டும். அதற்காக கடுமையான பயிற்சி முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. சில எளிய உடற்பயிற்சிகளை செய்வதற்கு பழக்கப்படுத்தினாலே போதுமானது.

நடனம்: குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு நடனம் சிறந்த உடற்பயிற்சியாக அமையும். ஆரம்பத்தில் எளிமையான நடன அசைவுகளை மேற்கொள்வதற்கு பழக்கினாலே போதுமானது.

ஏறி, இறங்குதல்: வீட்டின் படிக்கட்டுகளை கூட உடற்பயிற்சிக்கு பயன்படுத்தலாம். தினமும் காலையிலும், மாலையிலும் சில நிமிடங்கள் மாடிப் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கினாலே போதுமானது. இது குழந்தைகளுக்கு சிறந்த உடற்பயிற்சியாக அமையும். உடல் பருமன் பிரச்சினையும் எட்டிப்பார்க்காது.

வீட்டு வேலை: சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்துவது கூட உடற்பயிற்சி செய்வதற்கு ஈடானதுதான். வீட்டை சுத்தம் செய்தல், துடைத்தல், துவைத்த துணிகளை உலர வைத்தல், உலர்ந்த துணிகளை மடித்து வைத்தல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தலாம்.

ஸ்கிப்பிங்: உடற்பயிற்சியை விரும்பாத குழந்தைகள் கூட ஸ்கிப்பிங் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். இது குழந்தைகளுக்கு சிறந்த உடற் பயிற்சியாகவும் அமையும். தினமும் கால் மணி நேரமாவது ஸ்கிப்பிங் செய்தால் கூட போதுமானது. இதுவும் உடல் பருமன் பிரச்சினையை நெருங்கவிடாது. தசைகள் வலுவடைவதற்கும் ஸ்கிப்பிங் உதவும்.

நடைப்பயிற்சி: நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு வெளியேதான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டின் மொட்டை மாடியில் '8' என்ற எண் வடிவம் வரைந்து அந்த கோட்டில் இருந்து விலகாமல் நடக்க சொல்லலாம். இது கவன சிதறலை தடுக்க உதவும். புத்திக்கூர்மைக்கும் வித்திடும்.

யோகா: யோகாசனம் மேற்கொள்வது கூட உடற்பயிற்சியின் ஒரு அங்கம்தான். மன வலிமையையும், உடல் வலிமையையும் பெறுவதற்கு யோகாசனம் உதவும். ஆரம்பத்தில் எளிமையான யோகாசனங்களை செய்வதற்கு பழக்கப்படுத்தினாலே போது மானது. பின்னர் அவர்களே ஆர்வமாக எல்லா விதமான யோகாசனங்களையும் செய்வதற்கு முயற்சிப்பார்கள்.

பந்து போடுதல்: வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் குழந்தைகளுடன் சேர்ந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடுவதும் கூட உடற்பயிற்சியின் ஒரு அங்கம்தான். ஒருவர் பந்தை தூக்கி எறிய, மற்றவர்கள் பிடிக்க வேண்டும். ஒருவர் மாற்றி ஒருவர் பந்தை கடத்தி விளையாடுவதும் கூட சிறந்த உடற் பயிற்சியாக அமையும். இது போன்ற குழு விளை யாட்டுகள் குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். விரும்பி விளையாடுவார்கள்.


Next Story