இயற்கையைத் தேடும் வனச் சுற்றுலா..!


இயற்கையைத் தேடும் வனச் சுற்றுலா..!
x

பெண் வன விலங்கு புகைப்பட கலைஞரான ஸ்ரீதேவி, யானைகளைத் தேடி படம்பிடிப் பதையே தன்னுடைய ஸ்டைலாக கொண்டிருந்தார்.

ஒவ்வொரு புகைப்பட கலைஞருக்கும், ஒரு பிரத்யேக ஸ்டைல் இருக்கும். அந்தவகையில், பெண் வன விலங்கு புகைப்பட கலைஞரான ஸ்ரீதேவி, யானைகளைத் தேடி படம்பிடிப் பதையே தன்னுடைய ஸ்டைலாக கொண்டிருந்தார். அதற்காக கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு வனப்பகுதிகளுக்கு அடிக்கடி சென்றுவந்தவர், இப்போது தன்னுடன் பெண்களையும், குழந்தைகளையும் உடன் அழைத்து செல்கிறார்.

ஏன் இந்த முயற்சி என்பதற்கு ஸ்ரீதேவி பதிலளிக்கிறார்.

யானைகளை காதலிப்பது ஏன்?

தந்தை மூலமாக சிறுவயதிலேயே உருவான பந்தம் அது. குழந்தை பருவத்திலேயே அதன் பிரமாண்டத்தை கண்டு ரசித்திருக்கிறேன். அன்றிலிருந்தே, யானைகளின் காதலியாக மாறிவிட்டேன்.

வன விலங்கு புகைப்பட கலைஞராக மாறியது எப்போது?, எப்படி?

எனது பூர்வீகம் உடுமலைப்பேட்டை. யானைகளை ரசிப்பதற்காக, அவற்றை தேடி அடிக்கடி காட்டிற்குள் செல்வது வழக்கம். கோவை, மரையூர், ஆனை குளம், முதுமலை, பரம்பிகுளம், வால்பாறை மற்றும் சிறுமலை ஆகிய வனப்பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வருவேன். அந்த பயணங்களில் எல்லாம், வன விலங்குகளின் குறும்புகளும், சேட்டைகளும் என் கண்களில் படும். அந்த தருணங்களை 'கேப்சர்' செய்ய தொடங்கி, வன விலங்கு புகைப்பட கலைஞராகவே மாறிவிட்டேன். மேலும் அந்த பணி, எனக்கும் யானைகளுக்குமான பந்தத்தை அதிகப்படுத்தியது. கணவரின் ஊக்கமும் யானைகளை தேடித்தேடி புகைப்படம் எடுக்க வைத்தது.

காட்டிற்குள் வன சுற்றுலாஅழைத்து சென்றது எப்போது?

யானைகளை ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் காட்டிற்குள் அதிகம் உலாவ வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட யானைகள் வலசை போகும் எல்லா காடுகளும், எல்லா வழித்தடங்களும் எனக்கு அத்துப்படி ஆகின. இந்நிலையில், நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் யானைகளை பார்க்க ஆசைப்பட்டு, என்னுடன் காட்டிற்குள் சுற்றுலா வர ஆரம்பித்தனர். தகுந்த பாதுகாப்புகளுடன், அந்தந்த மாநில அரசின் அனுமதியுடன் வன சுற்றுலா செல்ல ஆரம்பித்தோம். யானைகளை மட்டுமின்றி, அந்த காட்டிற்குள் பிரபலமான நீர்வீழ்ச்சிகள், விலங்குகள், மூலிகை தாவரங்கள், மலை உச்சிகள், பள்ளத்தாக்குகள்... இப்படி காட்டின் அழகை, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இயற்கையின் அழகில், மயங்கியவர்கள் என்னுடைய அடுத்தடுத்த பயணங்களிலும் உடனிருந்தனர். உறவினர்கள் என்பதை தாண்டி, என்னுடைய பேஸ்புக் நண்பர்கள், உறவினர்களின் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என நிறையபேர் வனச் சுற்றுலாவை விரும்பினர். இப்படிதான் வனச் சுற்றுலா ஆரம்பமானது. இதை கடந்த 10 வருடங்களாகவே மேற்கொண்டு வருகிறோம்.

யாரையெல்லாம் வன சுற்றுலாவிற்கு அழைத்து சென்றிருக்கிறீர்கள்?

குழந்தைகள், குடும்ப பெண்கள்தான் என்னுடைய முதல் தேர்வு. ஏனெனில், வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் குடும்ப பெண்களுக்கு, இது மிகச்சிறந்த மன அழுத்தம் போக்கும் மருந்தாக அமையும். அதேபோல, பாடப்புத்தகங்களில் மட்டுமே இயற்கையையும், விலங்குகளையும் பார்த்து படித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளையும் காட்டிற்குள் அழைத்து சென்று வந்திருக்கிறேன். இதன் மூலம், காட்டின் இயற்கை சூழலையும், விலங்குகளின் வாழ்வியலையும், உணவு வகை களையும், பசுமை சூழலையும் அவர்களால் கண்கூடாக கண்டு உணர முடியும். அதேபோல, புகைப்பட கலை பயிலும் மாணவர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், தாவரவியல் அறிஞர்களையும் காட்டிற்குள் சுற்றுலா அழைத்துச் செல்கிறேன்.

குழந்தைகளும், பெண்களும் மகிழ்ந்தார்களா?

'என்ஜாய்' செய்ததுடன், இயற்கையை புரிந்து கொண்டனர். மனிதர்கள் மட்டுமல்ல, கண்ணுக்கு தெரிந்த-தெரியாத ஜீவராசிகளும் பூமியில் நிறைய வாழ்கின்றன என்பதை உணரத் தொடங்கினர். இயற்கையின் ஸ்பரிசத்தை உச்சி முகர்ந்தனர். குட்டி அருவிகளில், கலப்படமில்லாத நன்னீரில் குளித்து ஆர்ப்பரித்தனர். அரியவகை பட்டாம்பூச்சிகளை எல்லாம் கண்டு ஆச்சரியப்பட்டனர். காடுகளை ஆட்சி செய்யும், கள்ளம் கபடமில்லாத பழங்குடியின மக்களுடன் குதூகலித்தனர்.

வன சுற்றுலாவில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள் உண்டா?

காடு என்பதால் எதிர்பார்க்காத விருந்தாளிகளை நிறைய எதிர்பார்க்கலாம். சிறுத்தையை நேருக்கு நேராக எதிர்கொண்டது, யானை விரட்டியது... என காட்டு வாழ்க்கை நிறைய சுவாரசியங்களை கொடுத் திருக்கிறது.


Next Story