பொம்மை பாசம்


பொம்மை பாசம்
x

ரெயிலில் பயணித்த குழந்தை தவறவிட்டு சென்ற பொம்மையை ரெயில்வே போலீசார் அந்த குழந்தையின் வீடு தேடி சென்று ஒப்படைத்திருக்கும் சம்பவம் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ரெயில் பயணத்தின்போது பயணிகள் தவறவிடும் உடைமைகளை ரெயில்வே போலீசார் கைப்பற்றினால், உரிய விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைப்பதுண்டு. அவை பெரும்பாலும் நகையாகவோ, விலை உயர்ந்த பொருளாகவோ இருக்கும். ஆனால் ரெயிலில் பயணித்த குழந்தை தவறவிட்டு சென்ற பொம்மையை ரெயில்வே போலீசார் அந்த குழந்தையின் வீடு தேடி சென்று ஒப்படைத்திருக்கும் சம்பவம் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

செகந்தராபாத்-அகர்தலா ரெயிலில் மோஹித் என்பவர் தனது குடும்பத்துடன் பயணம் செய்திருக்கிறார். அவரது குழந்தை ரெயிலில் பயணித்தபோது பொம்மை ஒன்றை கையில் வைத்து விளையாடி இருக்கிறது. ரெயிலில் இருந்து இறங்கும்போது அந்த பொம்மையை உடன் எடுத்து செல்ல மறந்துவிட்டனர். அதை கவனித்த அருகில் இருந்த பயணி பட்நாயக், போனில் ரெயில்வே நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, பொம்மையுடன் குழந்தைக்கு இருந்த நெருக்கத்தையும், அது தொலைந்து போனதால் அதற்கு ஏற்பட்டிருக்கும் வருத்தத்தையும் குறிப்பிட்டு தங்களால் முடிந்தால் உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து குழந்தைக்கு பிடித்தமான அந்த பொம்மையை மீண்டும் அதனிடம் ஒப்படைப்பதற்கு ரெயில்வே போலீசார் முடிவு செய்தனர். முன் பதிவு செய்திருந்த தகவலின் அடிப்படையில் குழந்தையின் சொந்த ஊர், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஹாஜி காவன் என்பது கண்டறியப் பட்டது. அங்கு நேரடியாகவே சென்று பொம்மையை குழந்தையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

''ஒரு பொம்மைக்காக யாரும் எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். பொம்மையை தொலைத்தது வருத்தமாகத்தான் இருந்தது. மீண்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை'' என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார், குழந்தையின் தந்தை. பொம்மை திரும்ப கிடைத்த மகிழ்ச்சியில் அதனுடன் குழந்தை விளையாடும் புகைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story