புதுமையான பொறியியல் படிப்புகள்..!

பல்வேறு புதிய பொறியியல் படிப்புகள் கால நிலைக்கு ஏற்ப அதிகரித்துள்ளது.
பொறியியல் படிப்புகள் என்றாலே மெக்கானிக்கல், எலெட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என ஒருசில படிப்புகள் மட்டுமே அனைவராலும் அறியப்பட்டுள்ளது. இதில் தேவைக்கு அதிகமாக மாணவர்கள் படிப்பதால், வேலைவாய்ப்புகள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இன்றைய தேவைக்கேற்பவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பவும் புதுமையான பல பொறியியல் படிப்புகள் பலராலும் அறியப்படாமல் உள்ளது. ஆனால் உலகம் பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதற்கான சான்றாக பல்வேறு புதிய பொறியியல் படிப்புகள் கால நிலைக்கு ஏற்ப அதிகரித்துள்ளது. இந்த துறையில் பொறியியல் படிப்பா என நம்மை வியப்பூட்டும் வகையில் உள்ள சில பொறியியல் படிப்புகள் இதோ...
* நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஓசியன் என்ஜினீயரிங்
உலக பொருளாதாரத்தில் கடல் சார்ந்த போக்குவரத்து முக்கியத்துவம் வகிக்கின்றது. திறமையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை கையாள்வது கடல்சார் நிபுணர்களுக்கு ஒரு சவாலாகவே உள்ளது. இந்த துறையில் பொறியியல் படிப்பை படிப்பதன் மூலம் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
* விண்வெளி தொழில்நுட்பம்
பல மாணவர்களின் கனவாகவே இந்த துறை பார்க்கப்படுகின்றது. அசாத்திய திறமையும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே போதும்.
* நானோ டெக்னாலஜி
சத்தமில்லாமல் வளர்ந்து வரும் இந்த நானோ டெக்னாலஜி, தற்போது பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது.
* அணுப் பொறியியல்
ஒரு நாட்டின் அடிப்படையையே அசைக்கும் சக்தி கொண்டது நியூக்ளியர். இதனை படிப்பதன் மூலம் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கலாம்.
போக்குவரத்து தொழில்நுட்பம், உற்பத்திப் பொறியியல், நெசவுத்தொழில்நுட்பம், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம், இண்டஸ்டிரியல் பயோ டெக்னாலஜி, உணவுத் தொழில்நுட்பம் போன்ற புதுமையான பல தொழில்நுட்பங்கள், தற்போது டிரெண்ட் ஆகி வருகின்றன.
பொறியியல் என்றாலே வெறும் மெக்கானிக்கும், எலெக்ட்ரிக்கல்லும் அல்ல. அதையும் தாண்டி நம் அன்றாட வாழ்விற்கு பயன்படும் பல விஷயங்கள் இருக்கின்றன. மாணவர்கள் தங்களின் ஆர்வம் எதில் உள்ளது என்பதை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் அறிவுரையாக உள்ளது. இவை மட்டுமின்றி, பொறியியல் படிப்பிற்கு இணையான, புதுமையான கலை அறிவியல் படிப்பும் இருக்கிறது. அதில் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்துறை படிப்பை கூறலாம்.
தகவல் தொழில்நுட்பத்துறை
தற்போது உலகையே தன் கைக்குள் வைத்திருக்கும் துறை. பல நாடுகளின் பொருளாதார ஏற்றத்துக்குக் காரணமான துறை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை விரும்பும் டிஜிட்டல் ஆச்சரியங்களைத் தரும் இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம்.
பன்னிரெண்டாம் வகுப்பில் பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளில் படித்துத் தேர்வானவர்கள், இளங்கலை தகவல் தொழில்நுட்பப் படிப்பான பி.எஸ்சி., ஐ.டி. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் பரவலாக வழங்கப்படும் இந்தப் படிப்புக்கு, கடந்த பத்தாண்டுகளில் வரவேற்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பி.எஸ்சி., ஐ.டி மட்டுமல்லாது, இளங்கலையில் பி.பி.ஏ, பி.சி.ஏ துறைகளில் பட்டம் பெற்றவர்களும், எம்.எஸ்சி., தகவல் தொழில்நுட்பவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., ஐ.டி மற்றும் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்றவர்கள்,எம்.சி.ஏ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
கணினியின் செயல்முறையில் இருந்து, புரோகிராமிங் லாங்குவேஜ், கணினி பயன்படும் துறைகள், தகவல் தொழில்நுட்பத்தில் கணினியின் பங்கு என கணினி உலகின் செயல்பாடுகளுக்கான பரந்த அறிவு புகட்டப்படும்.






