மனிதத்திற்கு அச்சுறுத்தலாகுமா..? 'செயற்கை நுண்ணறிவு'


மனிதத்திற்கு அச்சுறுத்தலாகுமா..? செயற்கை நுண்ணறிவு
x

செயற்கை நுண்ணறிவு, மனித எந்திரம் என்றாலே நம் மனதின் முன் வருவது என்னவோ மனிதர்களை போலவே உருவமும், உடலமைப்பும் உடைய எந்திர மனிதர்களே.

மனித அதிகாரம் பறிக்கப்பட்டு எந்திர படை நம்மை ஆட்சி செய்வது அல்ல, நாம் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்து: அவை ஏற்கனவே நம் அன்றாட வாழ்வினுள் பல வழிகளில் நுழைந்துவிட்டது.

உங்கள் கைபேசியில் சமூக வலைத்தளங்கள் உங்களுக்காகவே பரிந்துரை செய்யும் பதிவுகளில் இருந்து உங்கள் வீட்டில் உள்ள மின்சாதனங்கள் உட்பட பல்வேறு பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் வரை பலதரப்பட்ட இடங்களில் பயன் தரும் வகையில் இத்தொழில்நுட்பம் இருக்கப்பெறுகிறது. பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியின்படி வரும் 2027-ம் ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு மெய்பொருட்களின் சந்தை 33.2 சதவிகிதமாக வளரும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த தொழில்நுட்பத்தால் ஏற்கனவே ஏற்பட்ட தீங்குகளையும், இனி வர இருக்கும் ஆபத்துக்களையும் நினைவில் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட தற்சமயம் வரை நான்கில் ஒரு பங்கு வேலைவாய்ப்புகள் இதனால் மாயமாய் மறைந்துள்ளன.

தொடர்வண்டி பயணம், திரையரங்குகள் போன்றவற்றிக்கு இன்று நாம் இணையத்தில்தான் அதிகம் நுழைவுச்சீட்டு வாங்குவதை உதாரணங்களில் சிலவாக கொள்ளலாம். மேலும் முன்னணி வணிக செய்தி நிறுவனம் ஒன்று, "வரும் 2030-க்குள் 20 மில்லியன் உற்பத்தி வேலைகள் ரோபோக்களால் இழக்கப்படும் என மதிப்பிடுகிறோம்" என குறிப்பிடுகிறது.

இவை ஒருபுறம் இருக்க, இத்தொழில்நுட்பம் தனிநபர்களின் பாதுகாப்பிற்கும், தனியுரிமைக்கும் கேடு விளைவிக்க வல்லது. இந்தவகையில், தற்சமயம் "டீப்ஃபேக்" எனும் "போலி ஆள்மாறட்ட" மென்பொருள் பேசுபொருளாகி உள்ளது. இதன் மூலம் அசல் நபருக்கும், போலிக்கும் இடையே வேறுபாடே காண இயலாத வண்ணம் பேச்சையும், செயல்பாடுகளையும் சித்தரிக்க முடியும். மேலும், பிற நாடுகளை உளவு பார்க்கவும், அவற்றின் ராணுவ ரகசியங்களை திருடவும் இத்தகைய கருவிகள் உதவ வழி செய்வதால் இவை அரசாங்கங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்துகின்றன.

எத்தனை தீங்குகள் வந்தாலும், இத்தொழில்நுட்பம் நமக்கும், நம் வருங்கால சந்ததியினருக்கும் எண்ணற்ற பயன்களை அளிக்க வல்லது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். எல்லா புதிய கண்டுபிடிப்புகளை போலவே இப்புதிய வரவையும் கவனத்தோடும் பொறுப்போடும் கையாள்வதே மனிதகுலம் செல்ல இருக்கும் சிறப்பிற்குரிய பாதையாகும்.

-விஷ்ணு, நாகர்கோவில்.

எல்லா புதிய கண்டுபிடிப்புகளை போலவே

இப்புதிய வரவையும் கவனத்தோடும் பொறுப்போடும் கையாள்வதே மனிதகுலம் செல்ல இருக்கும் சிறப்பிற்குரிய பாதையாகும்.


Next Story