நெடுஞ்சாலைகளில் உதிக்கும் புதிய பேருந்து நிறுத்தங்கள்


நெடுஞ்சாலைகளில் உதிக்கும் புதிய பேருந்து நிறுத்தங்கள்
x

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட பேருந்து நிறுத்தங்களை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக தேசிய நெடுஞ்சாலை லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை லிமிடெட், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவை இணைந்து பேருந்து நிலைய வடிவமைப்பு போட்டியை நடத்தின.

நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் பேருந்து நிலைய மாதிரி வரைபடங்களை சமர்ப்பித்தனர். பேருந்து நிலையத்தின் முகப்பு, உள்புற வடிவமைப்பு, பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் போன்றவை போட்டியின் மைய கருவாக அமைந்திருந்தது. அத்தகைய வசதிகளை அமைப்பதற்கு சாத்தியமானதாக ஜெய்ப்பூர் கட்டிடக்கலைஞர் வீரேந்திரா என்பவரின் புகைப்படம் அமைந்திருப்பதாக தேர்வுக் குழு முடிவு செய்து அறிவித்துள்ளது.

அந்த புகைப்படம் பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பயணிகள் அமரும் இருக்கைகள், கழிவறை, சிற்றுண்டி கடை போன்றவை பிரதானமாக அமைந்திருக்கின்றன. குறுகிய இடத்திலேயே பயணிகளுக்கு அதிக வசதியும் குறைந்தபட்ச பராமரிப்பும் தேவைப்படும் விதமாக அந்த பேருந்து நிறுத்தத்தின் வடிவமைப்பு உள்ளது. மேலும் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, சி.சி.டி.வி. கேமரா, சோலார் பேனல்கள், முதலுதவி பெட்டி, விளம்பர பதாகைகள் வைப்பதற்கு இடம் உள்பட ஏராளமான வசதிகள் கொண்டிருப்பதாக அந்த வரைபடம் சித்தரிக்கிறது.

வீரேந்திராவின் இந்த செயல்திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாராட்டி உள்ளனர். அவரது வரைபடம் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாயும் பரிசாகஅவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story