173 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி
பூண்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 173 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
பூண்டி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 173 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
சிறப்பு மனுநீதி நாள் முகாம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் பூண்டி மற்றும் சென்னசமுத்திரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி பூண்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
முதன்மை மாநிலமாக
அரசைத் தேடி மக்கள் என்ற நிலை மாறி மக்களைத் தேடி அவர்களின் இடத்திற்கே சென்று குறையை கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளை கண்டு வருகின்றோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 1½ ஆண்டுகளிலே தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக மாறியுள்ளது. இனிவரும் காலங்களில் இதனைக் காட்டிலும் தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாகி கொண்டே போகும். நமது ஆட்சியில் உள்ளாட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து கிராம புறங்களில் தண்ணீர், கால்வாய், சாலை, தெரு விளக்கு இது போன்ற அடிப்படை பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றது.
தற்போது தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் சிறந்து விளங்குகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்கள் வாயிலாக மாணவ-மாணவியர்களின் கலைத்திறன், அறிவுத்திறனை ஊக்கப்படுத்தி வருகின்றார். மேலும் மாணவிகளின் கல்வியினை ஊக்குவிப்பதற்காக புதுமைப் பெண் திட்டத்தினை தொடங்கி அதன் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவி
தொடர்ந்து பல்வேறு துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தமாக 173 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரத்து 789 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். இந்த இம்முகாமினையொட்டி 263 மனுக்கள் பெறப்பட்டது, இதில் 173 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 64 மனுக்கள் பரிசீலனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் மாலதி கணேசன், சமூக பாதுகாப்புத்துறை துணை கலெக்டர் தாரகேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) மணிமேகலை, கோட்டாட்சியர் வினோத்குமார், துணை கலெக்டர் (கலால்) சத்தியபிரசாத், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், வேளாண்மை இணை இயக்குநர் வடமலை, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம், தாசில்தார் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கங்காபாய், ரவி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.