வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி


வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

அதிக லாபம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா ஆனைப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 34). இவர் டைல்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 29-ந் தேதியன்று இவருடைய செல்போனை வாட்ஸ்-அப் மூலம் தொடர்புகொண்டு ஒருவர் பேசினார்.

அப்போது அந்த நபர், அருண்குமாரிடம் பகுதிநேர வேலை எனக்கூறி சில ரெஸ்டாரண்ட்டின் புகைப்படங்களை அனுப்பி அதற்கு மதிப்பீடு செய்து கொடுத்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் எனக்கூறினார். அதன்படி அருண்குமார் செய்து ரூ.210-ஐ பெற்றுள்ளார். பின்னர் வெவ்வேறு டெலிகிராம் ஐ.டி.களில் இருந்து அருண்குமாரை தொடர்பு கொண்டு பேசிய நபர், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார்.

ரூ.1½ லட்சம் மோசடி

இதை நம்பிய அருண்குமார், கடந்த 30-ந் தேதியன்று ரூ.1,000 செலுத்தி ரூ.1,410-யும், ரூ.3 ஆயிரம் செலுத்தி ரூ.3,810 ஆகவும் திரும்பப் பெற்றுள்ளார். அதன் பிறகு அவர், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலமும், மொபைல் ஆப் மூலமாகவும் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை 4 தவணைகளாக அனுப்பினார். ஆனால் டாஸ்க் முடித்த பிறகும் அருண்குமாருக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் அந்த நபர் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து அருண்குமார், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story