1000 மரக்கன்றுகள் நடும் திட்டம்

தஞ்சை-விக்ரவாண்டி புதிய புறவழிச்சாலையில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தொடங்கி வைத்தார்.
இந்த புறவழிச்சாலை, தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் பகுதியில் உள்ள சமுத்திரம் ஏரி கரை பகுதியில் இருந்து தொடங்குகிறது. இந்த சாலை தஞ்சையில் இருந்து கும்பகோணம் வரை மட்டும் 30 கி.மீ.தூரம் ஆகும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த புறவழிச்சாலைக்கு டி.என்.45 சி என பெயரிடப்பட்டு உள்ளது.
1,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக நேற்று தஞ்சையை அடுத்த கடகடப்பை கிராமத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட வனத்துறை அலுவலர் அகில்தம்பி மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் உதயசங்கர், சாலையை அமைக்கும் படேல் நிறுவனத்தின் பொது மேலாளர்கள் மல்லிகார்ஜூனாராவ், ராஜேஷ்குமார்சிங், திட்ட மேலாளர் ஷாநவாஸ், மேற்பார்வையாளர் செந்தில், ஊராட்சிமன்றத் தலைவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த புறவழிச்சாலையில் இருபுறமும் மரக்கன்றுகளும், சாலையில் நடுவில் மருதாணி செடிகளும், பூச்செடிகளும் நடப்பட்டன.






