திருப்போரூர் அருகே 6-ம் வகுப்பு மாணவனை மிரட்டி 8 பவுன் நகை பறிப்பு - 10-ம் வகுப்பு மாணவன் கைது


திருப்போரூர் அருகே 6-ம் வகுப்பு மாணவனை மிரட்டி 8 பவுன் நகை பறிப்பு - 10-ம் வகுப்பு மாணவன் கைது
x

திருப்போரூர் அருகே 6-ம் வகுப்பு மாணவனை மிரட்டி நகை பறித்த வழக்கில் 10-ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருப்போரூர் அடுத்த கண்ணப்பட்டு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த மாணவன் பள்ளியில் செல்போன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அதே பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனக்கு செல்போன் பயன்படுத்த ஆவலாக இருப்பதாகவும், ஆனால் வீட்டில் விடமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளான்.

வீட்டில் இருந்து பணம் எடுத்து வந்து கொடுத்தால் செல்போன் வாங்கி தருவதாகவும், வீட்டுக்கு தெரியாமல் பயன்படுத்தலாம் என்று 10-ம் வகுப்பு மாணவன் கூறி உள்ளான்.

இதையடுத்து, தனது தந்தையின் கடையில் இருந்து தினமும் சிறிது சிறிதாக பணம் எடுத்து வந்து 10-ம் வகுப்பு மாணவனிடம், 6-ம் வகுப்பு மாணவன் கொடுத்துள்ளான். இதையடுத்து, செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்த 10-ம் வகுப்பு மாணவன் தினமும் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் செல்போன் வாங்கியதை வீட்டில் சொல்லி விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளான். இதனால், பயந்துபோன மாணவன் தினமும் பணம் கொண்டுவந்து கொடுத்துள்ளான். ஒருகட்டத்தில் வீட்டில் இருக்கும் நகைகளை கொண்டு வந்து கொடுக்குமாறு கூறியதையடுத்து வீட்டில் இருந்த நகைகளை சிறிது சிறிதாக கொடுத்துள்ளான்.

இதனிடையே மகனிடம் அதிக பணம் புரளுவதையும் செல்போன் பயன்படுத்துவதையும் கண்ட, 6-ம் வகுப்பு மாணவனிடம் பெற்றோர் மகனிடம் விசாரித்தனர். அப்போது தன்னுடைய பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவன் தனக்கு செல்போன் வாங்கி கொடுத்ததையும், அதற்காகதான் கடையில் இருந்து தினமும் பணத்தை திருடி எடுத்துச்சென்று கொடுத்ததையும், இதை சொல்லியே வீட்டில் இருந்த நகைகளையும் கேட்டு பெற்றதாகவும் 6-ம் வகுப்பு மாணவன் தெரிவித்தான்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். மேலும், தங்களது வீட்டில் இருந்த 8 பவுன் நகைகள் காணாமல் போயிருப்பது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில், 10-ம் வகுப்பு மாணவன். 6-ம் வகுப்பு மாணவனை மிரட்டி செல்போன் வாங்கி கொடுத்து, வீட்டில் இருந்து நகைகளை எடுத்து வரச்செல்லி, அந்த நகைகளை அடகு கடையில் வைத்தும், சிலவற்றை விற்றும் பணத்தை ஜாலியாக செலவு செய்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், 10-ம் வகுப்பு மாணவனை கைது செய்து, சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

1 More update

Next Story