எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மயிலாடுதுறை, காரைக்கால் மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
காரைக்கால்,
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராஜ்குமார் (வயது40) என்பவரது விசைப்படகில் அவருடன் தங்கவேல் (48), ஆறுமுகம் (47), பிரபு (42), மணிவேல் (50), மதன் (27) மற்றும் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் என மொத்தம் 11 மீனவர்கள், கடந்த 17-ந் தேதி வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
சிறைபிடிப்பு
நேற்று காலை கோடியக்கரை தென்கிழக்கே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக துப்பாக்கி முனையில் 11 மீனவர்களையும் சுற்றி வளைத்தனர். மேலும் படகில் இருந்து மீன், வலை, மீன்பிடி சாதனங்கள் மற்றும் படகையும் பறிமுதல் செய்து இலங்கை கொண்டு சென்றனர்.
இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவகிராம பஞ்சாயத்தார், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தருமாறு, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் அடாவடி மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.