நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.114 கோடியில் சாலை சீரமைப்பு; மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.114 கோடியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது என மேயர் மகேஷ் தெரிவித்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.114 கோடியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது என மேயர் மகேஷ் தெரிவித்தார்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என மாநகராட்சி மேயர் மகேஷ் அறிவித்தார்.
அதன்படி முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமையான நேற்று தொடங்கியது. இதற்காக மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள விழா அரங்கில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை நடந்தது. மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார்.
பல்வேறு கோரிக்கை மனு
கூட்டத்தில் மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சுதா, நகரமைப்பு அதிகாரி வேலாயுதம், மாநகராட்சி நல அதிகாரி ராம்குமார், கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், சுனில் அரசு, ரமேஷ், ஜெயவிக்ரமன், சுப்பிரமணியன், சொர்ணத்தாய் மற்றும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டு வரி கட்டணத்தை குறைக்கக் கோரியும், சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் பிரச்சினை, வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிவறையை சீரமைக்க வேண்டும், சொத்துவரி பெயர் மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை தீர்த்து வைக்கக் கோரி மேயர் மகேஷிடம் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மேயர் மகேஷ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உடனடி நடவடிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி மேயராக பதவியேற்று 16 மாதங்கள் ஆகிறது. பதவியேற்ற பிறகு ஒவ்வொரு வார்டாக சென்று தினமும் காலையில் ஆய்வு செய்தேன். நடந்து சென்றும், இருசக்கர வாகனங்களில் சென்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற ரூ.267 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சொத்து வரி விதிப்பு மற்றும் பெயர் மாற்றம் தொடர்பாக மனுக்கள் அதிகமாக வந்துள்ளது.
இருவழிப்பாதை
நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலை சீரமைப்பிற்கு இதுவரை ரூ.114 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ஒரு சில சாலைகளை இருவழி சாலைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடை உரிமையாளர்களிடம் பேசி உள்ளோம். அவர்களும் இடம் தருவதாக உறுதி அளித்துள்ளனர். எவ்வளவு இடம் தேவை என்பதை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு வரையறை செய்து வருகிறார்கள். விரைவில் வடசேரி முதல் மணிமேடை வரையிலான சாலை இருவழிப்பாதையாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.