அனாதையாக சுற்றித்திரிந்த 12 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு - இறந்து போனதாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்பு


அனாதையாக சுற்றித்திரிந்த 12 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு - இறந்து போனதாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்பு
x

சென்னையில் சாலைகளில் அனாதையாக சுற்றித்திரிந்த 12 பேர் மீட்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இறந்து போனதாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீடகப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டார்.

சென்னை

சென்னை போலீசில் காவல்கரங்கள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சென்னை நகரில் சாலைகளில் அனாதைகளாக சுற்றித்திரியும் மனநோயாளிகள் உள்ளிட்டோரை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களது உறவினர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் ஒப்படைத்து வருகிறது.

போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி வைத்த இந்த அமைப்பு தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மேரிராஜூ தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு தொடங்கப்பட்டு, கடந்த 2 வருடங்களில் 4,113 பேர்களை மீட்டுள்ளனர். அவர்களில் 506 பேர்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 3,137 பேர்கள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 379 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் 8 பெண்கள் உள்ளிட்ட 12 பேர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் தமிழகத்தைச்சேர்ந்தவர்கள். 2 பேர் உத்தரபிரதேசம் மாநிலத்தவர்கள்.

இதில் பார்ப்போரை கண்கலங்க வைத்தவர் சாவித்திரி (வயது 55) என்ற பெண். 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சாவித்திரி இறந்து போனதாக கருதப்பட்டவர். அவர் காணாமல் போன நாளில் அவருக்கு ஆண்டு தோறும் குடும்பத்தாரால் திதி கொடுக்கப்பட்டதாம். அவரது கதை கண்ணீர் கதையாக உள்ளது. மதுரையைச்சேர்ந்த அவர் காணாமல் போனபோது மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருடைய கணவர் கோவிந்தராஜ் கூலி தொழிலாளி. மகன் விஜயகுமார், சென்னை போரூரில் டிரைவராக உள்ளார். முதலில் சாவித்திரி உயிரோடு இருப்பதாக போலீசார் சொன்னபோது, குடும்பத்தினர் நம்பவில்லை. அதன்பிறகு நேரில் பார்த்தவுடன் ரத்த உறவு அவர்களை அடையாளம் காண வைத்தது. கணவர் கோவிந்தராஜ், மகன் விஜயகுமார் ஆகியோர் அப்படியே சாவித்திரியை கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தனர். மனநோய் குணமான நிலையில் சாவித்திரி, அவரது கணவர், மகன் மற்றும் மருமகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மீட்கப்பட்ட 12 பேர்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. கூடுதல் கமிஷனர் லோகநாதன் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கி, அவர்களை குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தார்.

துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மேரிராஜூ ஆகியோர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரிந்தவர்கள் மீண்டும் கூடிய இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக காணப்பட்டது.


Next Story