மர்ம விலங்கு கடித்து 15 கோழிகள் சாவு
நித்திரவிளை அருகே தொழிலாளி வீட்டில் வளர்த்து வந்த 15 கோழிகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே தொழிலாளி வீட்டில் வளர்த்து வந்த 15 கோழிகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோழிகள் வளா்ப்பு
நித்திரவிளை அருகே உள்ள வளையசுற்று பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி, தொழிலாளி. இவர் தனது வீட்டின் பின் பக்கத்தில் கூண்டு அமைத்து ஆடு மற்றும் 15-க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்த்து வருகிறார்.
கோழிகளை பிற விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் கோழிக்கூண்டை சுற்றி வலைகளை அமைத்துள்ளார். தினமும் காலையில் கோழிகளை கூண்டிலிருந்து திறந்து விடுவதும், மாலையில் அவற்றை மீண்டும் கூண்டிற்குள் அடைப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் சின்னதம்பி வழக்கம்போல் கோழிகளை கூண்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சென்றார். நேற்று காலையில் மீண்டும் கோழிகளை திறந்துவிடச் சின்னதம்பி சென்றார்.
அப்போது, கூண்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வலைகள் சேதமடைந்து இருந்தது. மேலும், கூண்டிற்கள் இருந்த 15 கோழிகளில் 13 கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. 2 கோழிகள் மாயமாகி இருந்தன.
பொதுமக்கள் அச்சம்
கூண்டுக்குள் இறந்த கிடந்த கோழிகளை வெளியே எடுத்து பார்த்தபோது, அவற்றின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. கூண்டின் ஒரு இடத்தில் இருந்த இடைவெளி வழியாக ஏதே மர்ம விலங்கு உள்ளே புகுந்து கோழிகளை கடித்துக் கொன்றதும், 2 கோழிகளை தூக்கிச் சென்றதும் தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சின்னத்தம்பி இதுபற்றி முன்சிறை அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு தெரிவித்தார். இதற்கிடையே கோழிகளை மர்ம விலங்கு கொன்ற சம்பவம்அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.