நெல்லையில் 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது


நெல்லையில் 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது
x

நெல்லையில் 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நேற்று தொடங்கியது. 1 கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லையில் 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நேற்று தொடங்கியது. 1 கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரேஷன் கடைகளில் தக்காளி

தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி நேற்று நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 15 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

1 கிலோ ரூ.60-க்கு விற்பனை

அதாவது, நெல்லை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டுப்பாட்டில் உள்ள நெல்லை சூப்பர் மார்க்கெட் தலைமையிடம், டவுன் மாதா நடுத்தெரு, சாலியர் தெரு பழையது, சாலையர் தெரு புதியது, அக்கசாலை விநாயகர் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, தபால் அலுவலக வீதி ஆகிய 7 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதுபோல் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை கட்டுப்பாட்டில் உள்ள அன்புநகர், பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி, நடுக்கமுடையார்குளம் ஆகிய 4 ரேஷன் கடைகளிலும், டயோசீசன் கூட்டுறவு பண்டகசாலை கட்டுப்பாட்டில் உள்ள மகாராஜநகர், சமாதானபுரம், கே.டி.சி.நகர், திருநகர் ஆகிய 4 ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.30-க்கு ½ கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டது. இதை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

ஒரு மணி நேரத்தில்

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.130 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ரேஷன் கடையில் 1 கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளி வாங்க ரேஷன் கடைகளுக்கு வந்து விட்டனர். எனினும் ஒரு நபருக்கு ½ கிலோ தக்காளி வழங்க கூட்டுறவு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் ஒரு ரேஷன் கார்டுக்கு ½ கிலோ வீதம் தக்காளி விற்பனை செய்தோம். கடை திறந்த ஒரு மணி நேரத்திற்குள் எங்களுக்கு அனுப்பி வைத்த 15 கிலோ தக்காளியும் விற்பனையாகி விட்டது. தக்காளி விற்பனைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றனர்.


Next Story