ரூ.1,859 கோடியில் 16 புதிய துணை மின் நிலையங்கள்; முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
ரூ.1,859 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 19-5-2023 அன்று (நேற்று) சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ரூ.1,859 கோடியே 12 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களையும், ரூ.143 கோடியே 88 லட்சம் செலவில் 65 துணை மின் நிலையங்களில் 853 எம்.வி.ஏ. அளவுக்கு திறன் மேம்படுத்தப்பட்ட 67 மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தொழிற்துறை, விவசாயம், வணிகம், தகவல் தொழில்நுட்ப மையங்கள், மெட்ரோ ரெயில் திட்டங்கள், மின்சார வாகன மின்னூட்ட நிலையங்கள் ஆகியவற்றினை கருத்தில் கொண்டு, வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கிடவும், மேலும், காற்று மற்றும் சூரியசக்தி மூலம் பெறப்படும் பசுமை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திடவும், புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், துணை மின் நிலையங்களின் தரம் உயர்த்துதல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் புதிய விகிதாசார அறிமுகம் மற்றும் இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் திறனுள்ள மின் மாற்றிகள் நிறுவுதல் போன்ற பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
அந்த வகையில், சென்னை புளியந்தோப்பு, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் ரூ.1,718 கோடியே 95 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள 2 புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் படூர்; திருவள்ளூர் மாவட்டம் அரசூர் உள்ளிட்ட இடங்களில் ரூ.94 கோடியே 20 லட்சம் செலவில் நிறுவப்பட்ட 7 புதிய 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
துணை மின் நிலையங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம்; சென்னை மாவட்டம் ஆழ்வார்திருநகர்; காஞ்சீபுரம் மாவட்டம் மாத்தூர்; திருவள்ளூர் மாவட்டம் திருமலைவாசன் நகர் உள்ளிட்ட இடங்களில் ரூ.45 கோடியே 97 லட்சம் செலவில் நிறுவப்பட்ட 7 புதிய 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் என மொத்தம் ரூ.1,859 கோடியே 12 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு - கோவை
செங்கல்பட்டு மாவட்டம் இந்தளூர், இல்லேடு, கடப்பேரி; காஞ்சீபுரம் மாவட்டம் பள்ளிக்கரணை, சிங்காடிவாக்கம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்; உள்ளிட்ட இடங்களில் மின் மாற்றிகளின் திறனை உயர்த்தி, அவற்றின் செயல்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மின் மாற்றிகளின்திறன் உயர்வு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவள்ளூர், பட்டாபிராம், கும்மிடிப்பூண்டி சிப்காட் - 3, நொளம்பூர், தேர்வாய்கண்டிகை, மப்பேடு; உள்ளிட்ட இடங்களில் உள்ள 65 துணை மின் நிலையங்களில் ரூ.143 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் 67 மின் மாற்றிகளின் திறனை கூடுதலாக 853 எம்.வி.ஏ. உயர்த்தி, அவற்றின் செயல்பாட்டினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பங்கேற்றவர்கள்
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் தலைவர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.மணிவண்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.