தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் கப்பல் மூலம் நாளை அனுப்பப்படுகிறது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் நாளை (சனிக்கிழமை) அனுப்பி வைக்கப்படுகிறது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் நாளை (சனிக்கிழமை) அனுப்பி வைக்கப்படுகிறது.
நிவாரண பொருட்கள்
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப்பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் தமிழக மக்கள் சார்பில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்கும் 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்பி வைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக சென்னையில் இருந்து ரூ.30 கோடி மதிப்பிலான 9 ஆயிரத்து 45 டன் அரிசி, ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 50 டன் ஆவின் பால் பவுடர், ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் 8 டன் மருந்து பொருட்கள் ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
2-வது கட்டமாக...
2-வது கட்டமாக கடந்த மாதம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் மூலம் ரூ.48 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 14 ஆயிரத்து 712 டன் அரிசி, ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர், ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்து பொருட்கள் ஆக மொத்தம் ரூ.67 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 15 ஆயிரம் டன் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
17 ஆயிரம் டன்
இந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) 3-வது கட்டமாக இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்படி 16 ஆயிரத்து 650 டன் அரிசி, 250 டன் பால் பவுடர் மற்றும் மருந்து பொருட்கள் உள்பட சுமார் 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நிவாரண பொருட்களுடன் கப்பலை கனிமொழி எம்.பி., சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.






