சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 175 பேர் கைது
எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நீலகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி,
எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நீலகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
தமிழக சட்டமன்ற கூட்ட தொடரில் இருக்கை விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்காததை கண்டித்து அ.தி.மு.க. சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். நேற்று சென்னையில் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். சபாநாயகர் நடவடிக்கையை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட அ.தி.மு.க.வினர் 60 பேரை ஊட்டி நகர மத்திய போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஆர்ப்பாட்டம்
கோத்தகிரி பஸ் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சாந்திராமு தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 36 பேரை கைது செய்தனர்.
இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் குமார், கெங்கரை ஊராட்சி தலைவர் முருகன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வடிவேல், பொதுக்குழு உறுப்பினர் கே.கே.மாதன் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
175 பேர் கைது
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அ.தி.மு.க. நகர செயலாளர் சையத் அனூப்கான் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் நகர செயலாளர் ராஜா தங்கவேல், தலைமை கழக பேச்சாளர் ராமமூர்த்தி, முஜிப் ரகுமான், பாபு மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மறியலில் ஈடுபட்டதாக பந்தலூரில் 28 பேர், மஞ்சூரில் 15 பேர், மசினகுடியில் 11 பேர் உள்பட நீலகிரி மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் 175 பேரை போலீசார் கைது செய்தனர்.