புழல் ஜெயிலில் கைதிகளுக்கு போதை மாத்திரைகளை கொடுக்க முயன்ற இருவர் கைது


புழல் ஜெயிலில் கைதிகளுக்கு போதை மாத்திரைகளை கொடுக்க முயன்ற இருவர் கைது
x

புழல் ஜெயிலில் கைதிக்கு கஞ்சா-போதை மாத்திரைகள் கடத்தலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

புழல் விசாரணை ஜெயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த முகேஷ் குமார் (வயது 28) என்பவரை தலைமைச் செயலக காலனி போலீசார் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி திருட்டு, வழிப்பறி வழக்குகளில் கைது செய்து விசாரணை ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஜெயிலில் இருந்து வரும் முகேஷ் குமாரை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் எனக்கூறிக் கொண்டு நேற்று முன்தினம் ஓட்டேரியை சேர்ந்த சுதாகர் (26) மற்றும் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் வந்தனர். இதையடுத்து, அவர்கள் கொண்டு வந்த தின்பண்டங்கள் மீது சந்தேகம் கொண்ட சிறை போலீசார் அவற்றை சோதனை செய்தனர். அதில் குளியல் சோப்பில் 10 கிராம் கஞ்சா மற்றும் 13 போதை மாத்திரைகள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இது குறித்து சிறை போலீசார் தரப்பில் புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சண்முகம் சுதாகரை கைது செய்து புழல் ஜெயிலிலும், 17 வயது சிறுவனை சிறார் கூர்நோக்கும் இல்லத்திலும் அடைத்தனர். புழல் ஜெயில் கைதிக்கு கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story