செல்போன்கள் திருடிய 2 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே செல்போன்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் அரகண்டநல்லூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வடகரைதாழனூர் கிராமத்தை சேர்ந்த வேலு மகன் கார்த்தீசன் (வயது 19), தீர்த்தமலை மகன் அமல்ராஜ் (23) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் திருக்கோவிலூர் அருகே ஆலம்பாடி முருகன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தன் உள்பட 3 பேரிடம் செல்போன்களை திருடி அதனை திருக்கோவிலூர் பகுதியில் உள்ள செல்போன் பழுது நீக்கம் செய்யும் கடைகளில் விற்பனை செய்ததும் தெரிந்தது. மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 செல்போன்களை திருடிகொண்டு வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இது தவிர தப்பிச்சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து திருட்டு செல்போன்களை வாங்கிய கடைக்காரர்கள் அதனை உடனே போலீசில் ஒப்படைக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.