மின்வாரிய அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
திருவாடானை பகுதியில் மின்திருட்டு, முறைகேடில் ஈடுபட்ட மின்வாரிய அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொண்டி,
திருவாடானை பகுதியில் மின்திருட்டு, முறைகேடில் ஈடுபட்ட மின்வாரிய அலுவலர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மின் திருட்டு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உதவி மின்வாரிய அலுவலகத்தில் முகவராக பணிபுரிந்தவர் சூச்சனி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 45). இவர் முறைகேடாக மின் மீட்டர்களை பயன்படுத்தி மின் திருட்டுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாக மின் திருட்டு தடுப்பு பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 30-ந் தேதி திண்டுக்கல் மின் திருட்டு தடுப்பு பறக்கும் படையினர் திருவாடானையில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றின் அறையில் இருந்த மின் மீட்டரை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டு இணைப்பு பெற்று வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ரூ.33 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பறக்கும் படையினர் மின்வாரிய முகவர் மகாலிங்கத்தின் மளிகை கடையை ஆய்வு செய்தனர். அங்கு பழுதடைந்த மின் மீட்டரை வைத்து முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. அதனடிப்படையில் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
உறவினர்கள் வீடுகளில் சோதனை
இதையடுத்து சூச்சனி கிராமத்தில் உள்ள மகாலிங்கத்தின் வீட்டை சோதனையிட்டபோது அங்கு ஓடாத பழைய மின் மீட்டரை பொருத்தி 2 ஏ.சி. பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கபட்டு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதற்கிடையே கடந்த 3-ந் தேதி தூத்துக்குடி மின் திருட்டு தடுப்பு பறக்கும் படையினர், மகாலிங்கத்தின் உறவினர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியபோது 2 வீடுகளில் முறைகேடாக மின் மீட்டர் மாற்றப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அவரது உறவினர்கள் இருவருக்கு தலா ரூ.44 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மதுரையில் உள்ள மின் திருட்டு தடுப்பு படையினர் சூச்சனி கிராமத்தில் மகாலிங்கத்தின் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை செய்தபோது ஓடாத மின் மீட்டர் பொருத்தப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக மின் கட்டணமே செலுத்தப்படாதது தெரியவந்தது. பின்னர் ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதில் மகாலிங்கம் தனது வீட்டுக்கான அபராத தொகை ரூ.1.49 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
பணியிடை நீக்கம்
மகாலிங்கத்தின் உறவினர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை அனைவரும் செலுத்தி விட்டனர். முகவர் மகாலிங்கம் அவரது கடைக்கு விதிக்கப்பட்ட ரூ.1.61 லட்சம் அபராத தொகையை இன்னும் செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் மின்வாரிய அலுவலராக பணிபுரிந்து, மின்வாரியத்தின் வருவாய் இழப்புக்கு காரணமாகவும், மின் திருட்டுக்கு உடந்தையாகவும் செயல்பட்டதாக திருவாடானை உதவி மின்வாரிய அலுவலக முகவர் மகாலிங்கம், இதற்கு உடந்தையாக இருந்ததாக திருவாடானை உதவி மின்வாரிய அலுவலக மின் கணக்கீட்டாளர் ஜெயக்குமார் ஆகியோரை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.