விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
கடத்தூர்
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
மொபட் மீது பஸ் மோதியது
கோபி அருகே உள்ள ஓடத்துறை திருமால் நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த 24.3.2018 அன்று மொபட்டில் ஓடத்துறையில் இருந்து தாழக்கொம்பு புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பெருமாள் படுகாயம் அடைந்தார்.
இதுபற்றிய வழக்கு கோபி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 7.4.2021 அன்று பாதிக்கப்பட்ட பெருமாளுக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 330 வழங்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் பெருமாளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்யுமாறு நீதிபதி ஸ்ரீவித்யா 3.6.2023 அன்று உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நேற்று கோபி பஸ்நிலையத்தில் கோவை செல்வதற்காக நின்றிருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
பரபரப்பு
இதேபோல் கோபி அருகே உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (47). கூலி தொழிலாளி. கடந்த 12.7.2007 அன்று கோபியில் இருந்து பெருந்துறை செல்லும் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். கீழேரிபாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோகனசுந்தரம் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி, கோபி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மோகனசுந்தரத்துக்கு 17.2.2010 அன்று ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 940 இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி நேற்று கோபி பஸ்நிலையத்தில் சத்தியமங்கலம் செல்வதற்காக நின்றிருந்த அரசு பஸ்சை கோர்ட்டு உழியர்கள் ஜப்தி செய்தனர்.
கோபி பஸ்நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.