வைக்கோல் படப்புக்கு தீ வைத்த 2 பேர் கைது
வைக்கோல் படப்புக்கு தீ வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 23). இவர் தனது வீட்டு முன்பு தொழுவம் அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகள் மிரண்டு ஓடி வந்த நிலையில் வெளியே வந்து பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (23), கனகராஜ் (24) ஆகிய 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது அவர்களிடம் இதுபற்றி கேட்டவுடன் அவர்கள் வேகமாக சென்று விட்டனர். இந்நிலையில் ஒரு ஆடு காணாமல் போகவே சுரேஷ்குமார், அவர்கள் 2 பேரிடமும் கேட்டபோது அவர்கள் சுரேஷ்குமாரிடம் தகராறு செய்து மாட்டு தொழுவத்தை கொளுத்தி விடுவோம் என மிரட்டினர். இதற்கிடையே மாட்டுத்தொழுவம் அருகே உள்ள வைக்கோல்படப்பு தீப்பற்றி எரிந்தது. சுரேஷ்குமார் தீயணைப்பு படையினர் உதவியுடன் தீயை அணைத்தார். இதுகுறித்து ரமேஷிடம் கேட்டபோது மீண்டும் பிரச்சினை செய்தால் வீட்டை கொளுத்திவிடுவோம் என மிரட்டி சென்றுள்ளார்.
இதுபற்றி சுரேஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் வச்சக் காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ், கனகராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து ரமேஷ் ஜாமீனில் வெளிவந்த நிலையில் சுரேஷ்குமார் மற்றும் சிலர் சங்கரலிங்காபுரத்தில் உள்ள ரமேஷ் வீட்டுக்கு சென்று வீட்டில் இருந்த ரமேஷ், அவரது தந்தை தங்க பாண்டி (57), தாய் முத்துலட்சுமி (52) ஆகிய 3 பேரையும் தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ்குமார் மற்றும் சிலர் மீது ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.