மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
சீர்காழி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு நடந்து வந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சீர்காழி பிடாரி கீழ வீதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது22) என்பதும், மற்றொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
2 பேர் கைது
விசாரணையில் இருவரும் மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும், திருடிய மோட்டார் சைக்கிளை கோகுலகிருஷ்ணன் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் கோகுலகிருஷ்ணன் வீட்டில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.