மோட்டார் சைக்கிளில் வெடி பொருட்களை எடுத்து வந்த 2 பேர் கைது
மோட்டார் சைக்கிளில் வெடி பொருட்களை எடுத்து வந்த 2 பேர் கைது
சுவாமிமலை அருகே பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளில் வெடி பொருட்களை எடுத்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள ஏரகரம் பைபாஸ் சாலையில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன், சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் சாக்கு மூட்டையுடன் வந்து கொண்டிருந்தனர். இவர்களை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர்.
வெடி பொருட்களுடன் வந்த 2 பேர்
விசாரணையில் அவர்கள் சுவாமிமலை அருகே உள்ள சோழங்கர்நத்தம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் ஜான்சன்(வயது 28), கோவிந்தராஜ் மகன் ரஞ்சித்குமார்(24) ஆகியோர் என்பதும், அவர்கள் இருவரும் சுவாமிமலை அருகே திருவலஞ்சுழி கிராமத்தில் உள்ள வெடிக்கடையில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையில் வெடி மருந்து தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர் உள்ளிட்ட 15 கிலோ எடை கொண்ட வெடி பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. வெடி பொருட்களை இவர்கள் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததை தொடர்ந்து போலீசார் அவற்றை கைப்பற்றினர்.
கைது-பறிமுதல்
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சன், ரஞ்சித்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.