பள்ளி வளாகத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பலி


வாணியம்பாடி அருகே பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி,

வாணியம்பாடி அருகே பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.

சாலை அமைக்கும் பணி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்திலிருந்து அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காக, சிக்கனம்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி அங்கிருந்த முரம்பு மண்ணை எடுத்து சாலை பணிக்காக பயன்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த கன மழை காரணமாக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி காணப்பட்டது.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்ற, சிக்கனாங்குப்பம் ராசன் வட்டம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தராஜின் மகள் மோனிகா (வயது 10), வேலு மகள் ராஜலட்சுமி (13), மணிவேல் (7) ஆகியோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பள்ளிக்கு வந்தனர்.

அவர்கள் பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் குளித்ததாக கூறப்படுகிறது.

அப்போது மணிவேல் மேலே வந்து விட்டான். 2 மாணவிகளும் மேலே வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் அந்த பகுதியில் இருந்தவர்களிடம் கூறினான்.

சாவு

இதையடுத்து பொதுமக்கள் அங்கு வந்து நீரில் மூழ்கிய 2 சிறுமிகளையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது இருவரும் இறந்து போனதாக தெரிவித்தனர். இறந்த ேமானிகா 5-ம் வகுப்பும், ராஜலட்சுமி 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

தகவல் அறிந்த அம்பலூர் போலீசார் 2 மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை

இந்த நிலையில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் துரைராஜ் உள்ளிட்ட போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்கள் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். 2 மாணவிகள் அதுவும் அவர்கள் படித்த பள்ளியிலேயே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மூழ்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story