கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியர்கள் நீக்கம்..!


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியர்கள் நீக்கம்..!
x

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியர்களை நீக்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்,

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரிய கலவரமாக வெடித்து வன்முறையில் முடிந்தது. மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து அவரது தாய் செல்வி, சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே கலவரத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 15-ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் சுமார் 1,200 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருந்து 2 ஆசிரியர்களை நீக்கி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபர் கீர்த்திகா, 2-வது நபர் ஹரிப்பிரியா வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை ஏதும் இருந்தால், வரும் 5ஆம் தேதிக்குள் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக ஒரு நபர் விசாரணை குழு அமைத்து விசாரிக்க கோரி மேல்முறையீடு செய்யப்போவதாக ஸ்ரீமதியின் தாய் செல்வி கூறியுள்ளார்.





Next Story