ஏலச்சீட்டு நடத்தி ரூ.18.83 லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
ஏலச்சீட்டு நடத்தி ரூ.18.83 லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஏலச்சீட்டு நடத்தி ரூ.18.83 லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஏலச்சீட்டு
திருச்சி பிச்சாண்டவர் கோவிலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 46). இவரது மனைவி ஞானசெல்வி (42). இவர்கள் இருவரும் 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். அதில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் செலுத்தினால் 20 மாதங்களுக்கு பிறகு ரூ.1 லட்சம் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதனை நம்பி அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் அவரது மனைவி நித்தியானந்தகிரி உள்பட 10 பேர் அந்த ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளனர். இவர்கள் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் கட்டியுள்ளனர்.
இந்த நிலையில் 17 மாதங்கள் பணம் கட்டியுள்ளனர். இதையடுத்து ஜெகதீசனின் மனைவி நித்தியானந்தகிரி சீட்டு பணத்தை எடுக்க விரும்பி பணத்தை கேட்டுள்ளார். ஆனால் ரமேஷ் மற்றும் ஞானசெல்வி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். மேலும் ஏலச்சீட்டில் சோ்ந்த யாருக்கும் பணத்தை திரும்ப கொடுக்காமல் மொத்தம் ரூ.18 லட்சத்து 83 ஆயிரத்து 500-ஐ ஏமாற்றியுள்ளனர்.இதுகுறித்து கடந்த 2012-ம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஜெகதீசன் புகார் கொடுத்தார்.
2 ஆண்டு சிறை தண்டனை
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் ரமேஷ் மற்றும் ஞானசெல்வி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனா சந்திரா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.